லாக்கி பெர்குசன் 
விளையாட்டு

4 மெய்டன் ஓவர்கள் வீசி லாக்கி பெர்குசன் சாதனை | T20 WC

செய்திப்பிரிவு

டிரினிடாட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - சி’ பிரிவு ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக நியூஸிலாந்து அணியின் பவுலர் லாக்கி பெர்குசன், 4 ஓவர்கள் வீசி ரன் ஏதும் கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் வீசிய 24 பந்துகளிலும் ரன் ஏதும் கொடுக்காத முதல் பவுலர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். திங்கட்கிழமை அன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முதல் இன்னிங்ஸின் 5, 7, 12 மற்றும் 14-வது ஓவர்களை அவர் வீசி இருந்தார். இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இருந்தாலும் அந்த அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. தனது செயல்பாடு மகிழ்ச்சி தந்ததாகவும். பெரிய நம்பிக்கையுடன் களம் கண்ட தங்களது அணி முதல் சுற்றோடு வெளியேறுவது வருத்தம் தருவதாகவும் லாக்கி பெர்குசன் தெரிவித்தார். ஆட்ட நாயகன் விருதை அவரே வென்றார்.

டி20 கிரிக்கெட்டில் இதற்கு முன்பும் 4 ஓவர்களை மெய்டனாக வீசி உள்ளார் கனடாவின் சாத் ஜாபர். கடந்த 2021-ல் பனாமா அணிக்கு எதிராக அவர் அந்த சாதனையை புரிந்திருந்தார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதற்கு முன்னர் அதிகபட்சம் 2 ஓவர்கள் மெய்டனாக வீசப்பட்டுள்ளது. 2012-ல் இலங்கையின் அஜந்தா மென்டிஸ் மற்றும் இந்தியாவின் ஹர்பஜன் சிங் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT