ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளின் போது இந்திய வீரர்களை நிலைகுலையச் செய்ய வசை வார்த்தைகளைப் பயன்படுத்துவோம் என்று ரியான் ஹேரிஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை நிலைகுலையச் செய்ய வசை வார்த்தைப் பிரயோகங்கள் நிச்சயம் உண்டு என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹேரிஸ் கூறியுள்ளார்.
"அவர்களை (இந்திய வீரர்கள்) நிலைகுலையச் செய்யும் வசைமொழி நிச்சயம் உண்டு. ஆனால் அவர்களும் திருப்பிக் கொடுப்பவர்கள்தான், இந்திய அணியும் அதற்குச் சளைத்தது அல்ல, ஜடேஜா ஸ்லெட்ஜ் செய்வார், விராட் கோலிக்கும் ஓரிரு வார்த்தைகளை எதிர்த்துக் கூறுவது பிடித்தமானதே.
நான் ஏதாவது தவறாகப் பேசி அதனால் தண்டனை கிடைக்கும் என்றால் அது ஐசிசி-யின் தண்டனையாகவே இருக்க வேண்டும், பிசிசிஐ-யின் செயலாக அது இருக்கக் கூடாது. அங்கு என்ன நடந்தது என்று யாருக்குத் தெரியும் (ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரம்), ஐசிசிதான் ஆட்டத்தின் நிர்வாக அமைப்பு, முடிவுகள் ஐசிசி எடுக்கும் முடிவாக இருக்க வேண்டும். இந்தியாவுக்கு அது பிடிக்கவில்லையெனில் அவர்கள்தான் அந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
நாங்கள் எங்கள் கேப்டன், பயிற்சியாளர், கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் ஐசிசி என்ன கூறுகிறதோ அதன் படியே செல்வோம்.
விராட் கோலி நிறைய பாடுபடவேண்டும், அவரை டிரைவ் ஆடச் செய்ய வேண்டும், அவர் நிறைய பந்துகளை எட்ஜ் செய்கிறார். அவரது பேடில் பந்து வீசினால் அவருக்கு அது மிக எளிது. ஆகவே சற்று வைடாக ஆஃப் திசையில் வீசுவோம். அவர் நிச்சயம் எங்களுக்கு எதிராக சிறப்பாக ஆடி நிரூபிக்க முயற்சி செய்வார். ஏனெனில் அவர் சிறந்த பேட்ஸ்மென், எங்களுக்கு எதிராக அவர் சதங்களை எடுப்பதை நாங்கள் விரும்பவில்லை.
அவர் அவுட் ஆனாலும் பரவாயில்லை என்று ஷாட்களை ஆடக்கூடியவர், ஆதிக்கம் செலுத்த நாட்டமுள்ளவர். ஆகவே அவரை நிறுத்துவது எங்கள் முதல் வேலை.
இந்தியர்கள் இந்தியாவுக்கு வெளியே அவ்வளவு நன்றாக விளையாடுவதில்லை. அவர்கள் சொந்த நாட்டில் எங்களுக்கு நிறைய கொடுக்கின்றனர், ஆகவே இங்கு அவர்களுக்கு நாங்களும் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளோம். அதுவும் மிட்செல் ஜான்சன் நெருப்பு போல் வீசிவரும் நிலையில்... பார்ப்போம் இந்தியா என்ன செய்கிறது என்று”
என்கிறார் ரியான் ஹேரிஸ்.