சென்னை: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியா - குவைத் அணிகள் இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் மோதுகின்றன. இந்த ஆட்டத்துடன் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அவரை ஜாம்பவான் என குரோஷியா கால்பந்து வீரர் லூகா மோட்ரிச் புகழ்ந்துள்ளார்.
“ஹாய் சுனில். தேசிய அணிக்காக நீங்கள் விளையாடும் கடைசி போட்டிக்காக உங்களை நான் வாழ்த்துகிறேன். நீங்கள் இந்த விளையாட்டின் ஜாம்பவான். உங்களது சக அணி வீரர்களுக்காக இந்த ஆட்டத்தை மறக்க முடியாத ஆட்டமாக நீங்கள் மாற்றுவீர்கள் என நான் நம்புகிறேன். குட் லக்” என தனது வாழ்த்து செய்தியில் லூகா மோட்ரிச் தெரிவித்துள்ளார்.
இதற்கு இந்திய அணியின் கால்பந்து பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் நன்றி தெரிவித்துள்ளார். லூகாவின் இந்த வாழ்த்து வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
இந்திய நாட்டுக்காக சர்வதேச அரங்கில் சுனில் சேத்ரி பதிவு செய்த 94 கோல்கள் வெறும் கோல்கள் மட்டுமல்ல. கால்பந்து ஆட்டத்தின் மீது ஒரு தேசத்தின் ஆர்வத்தை ஒளிர செய்யும் வகையில் அமைந்தது. இந்திய அணிக்காக அவர் விளையாடிய 150 சர்வதேச போட்டிகளின் ஒவ்வொரு நிமிடமும் தரமான ஆட்டமாக இருந்தது.
கடந்த மே 16-ம் தேதி அன்று தனது ஓய்வு முடிவை அறிவித்தார் சுனில் சேத்ரி. அவரது அந்த ஓய்வு அறிவிப்பு இந்திய கால்பந்து ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களின் பார்வையை கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தின் பக்கமாக திருப்பியுள்ளது. பிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்று தொடரில் இந்திய அணி இறுதிக்கட்ட நிலைக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது.