ஜார்ஜ்டவுன்: நடப்பு டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தங்கள் நாட்டின் தேசிய கீதம் ஒலித்த அந்த தருணம் சிறந்தது என உகாண்டா அணியின் கேப்டன் மசாபா தெரிவித்துள்ளார்.
அண்மையில் தொடங்கிய இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒரு குரூப்புக்கு ஐந்து அணிகள் என நான்கு குரூப்களாக அணிகள் முதல் சுற்று ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. இதில் குரூப் சி-யில் உகாண்டா இடம் பெற்றுள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று அந்த அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பை தொடரில் தங்களது முதல் போட்டியில் விளையாடியது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆப்பிரிக்கா பிராந்திய தகுதி சுற்றில் விளையாடி அந்த அணி முதல் முறையாக உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
“உலகக் கோப்பை அரங்கில் எங்களின் தேசிய கீதம் ஒலித்ததும், எங்கள் நாட்டின் கொடி பறந்ததும் சிறந்த தருணமாகும். இது என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவாக இருக்கும். ஆப்கானிஸ்தான் தரமான பந்து வீச்சாளர்களை கொண்ட அணி. அவர்கள் இந்தப் போட்டியில் சிறந்த முறையில் விளையாடினார்கள். அடுத்த போட்டியில் நாங்கள் கம்பேக் கொடுக்க முயற்சிப்போம்” என உகாண்டா கேப்டன் மசாபா தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் 124 ரன்களில் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான். ஆப்கன் பவுலர் ஃபசல்ஹக் ஃபரூக்கி, அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். நேற்று நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் 6 விக்கெட்டுகளில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.
இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக 10 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. இதில் 90 ரன்களை ஸ்காட்லாந்து அணி எடுத்திருந்தது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாட உள்ளன.