விளையாட்டு

என் மகனுக்கு மதுப்பழக்கம் இல்லை: புவனேஷ் குமார் தந்தை

செய்திப்பிரிவு

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிவில் தொடர் நாயகன் விருது பெற்ற புவனேஷ் குமாருக்கு ஷாம்பைன் மதுபானத்தை பரிசாக அளித்தது பற்றி அவரது தந்தை வருத்தம் தெரிவித்துள்ளார்.

"எனது மகன் புவனேஷ் குமார் தொடர் நாயகன் விருது பெற்றது மகிழ்ச்சி ஏற்பத்துவதற்குப் பதிலாக இந்தியாவின் தோல்வி அதிக காயப்படுத்தியது. என் மகன் புவனேஷ் மது அருந்த மாட்டார், அவர் ஷாம்பைன் பாட்டிலை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறார்? புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லை, ஒரு கிளாஸ் வைன் கூட அவர் ருசித்ததில்லை.

ஷாம்பைன் பாட்டிலை பரிசாக அளிக்கும் பழக்கம் வேறு எந்த நாட்டிலும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தப் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும்” என்று மீரட்டிலிருந்து புவனேஷ் குமார் தந்தை கிரண் பால் சிங் பத்திரிக்கை ஒன்றிற்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

ஆனால் புவனேஷின் மூத்த சகோதரி ரேகா கூறும்போது, இதுவரை புவனேஷ் வைன் பாட்டிலைக் கூட தொட்டதில்லை. ஆனால் இப்போது அவர் முடிவெடுப்பது அவரது கையில் உள்ளது. அதாவது இந்த ஷாம்பைன் பாட்டிலை அணியினருக்கு அளிப்பதா அல்லது அதை தொடர் நாயகன் விருதின் நினைவாக தன்னிடமே வைத்துக் கொள்வதா என்பதை புவனேஷ்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT