காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை சம்மேளனத்துக்கான தற்காலிக கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய குத்துச்சண்டை பயிற்சியாளர் சாந்து, சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினர் கிஷன் நர்ஸி ஆகியோரிடம் கலந்தாலோசித்த பின்னரே தேர்வு முகாமை தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டது. தேர்வு முகாம் எப்போது நடைபெறும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான முகாம் ஆகஸ்ட் 9 முதல் 11 வரை பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு மையத்தில் (என்ஐஎஸ்) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.