விளையாட்டு

‘இறுதி ஓவர்களில் இவ்வளவு ரன்களைக் வாரி வழங்குவது கிரிமினல்’ - விராட் கோலி காட்டம்

இரா.முத்துக்குமார்

சிஎஸ்கே அணிக்கு எதிராக 205 ரன்கள் எடுத்தும் தோல்வி தழுவியதற்கு தன்னுடைய கேப்டன்சி கோளாறுகள் மீது கவனம் செலுத்த வேண்டிய கோலி, கடைசி ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியதை சாடுகிறார்.

சாஹல், உமேஷ் யாதவ் இருவரையுமே 15 ஒவர்களுக்குள் முடித்து விட்டு கடைசியில் இரண்டு பவுலர்கள் மட்டுமே வீசினால், என்ன ஆகும், வெரைட்டி இல்லாத பந்து வீச்சை தோனி என்ன செய்வார் என்று தெரியாதா கோலிக்கு? அதுதான் நடந்தது. கொலின் டி கிராண்ட்ஹோம் என்று ஒருவர் பந்து வீசுவார் என்ற நினைப்பேயில்லாத ஒரு கேப்டன்சி எப்படி வெற்றி பெற முடியும்?

ஆட்டம் முடிந்து விராட் கோலி கூறியதாவது:

இந்த ஆட்டத்திலிருந்து பல விஷயங்களைப் பார்க்கிறோம். நாங்கள் பந்து வீசிய விதம் ஏற்றுக் கொள்ளவே முடியாதது. இறுதி ஓவர்களில் இவ்வளவு ரன்களை வாரி வழங்கியது கிரிமினல்.

அடுத்தக்கட்டத்துக்கு நகரும் போது இந்த விவகாரத்தை விவாதித்து தீர்வு காண வேண்டும். 72/4 என்ற பிறகு 200 ரன்களை வெற்றிகரமாகத் தடுக்க முடியவில்லை, பின்நடுவரிசை வீரர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

வீரர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும், அவர்கள் மேல் போதுமான நம்பிக்கை வைக்க வேண்டும் அவர்களும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தெளிவுடன் செயல்பட வேண்டும்.

பிட்ச் நன்றாகத்தான் ஆடியது. ஸ்பின் ஒரு பெரிய காரணியாக இந்தப் பிட்சில் அமைந்தது. இரு அணிகளும் 200 ரன்கள் எடுக்கிறது என்றால் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினோம் என்று பொருள்.

ராயுடு இளம் வீரர் அல்ல, அவரும் 15 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். தரமான வீரர் அவர், இந்தியாவுக்காகவும் ஆடுகிறார். யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாது, ஆனால் ராயுடுவுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.

தோனி உண்மையில் நல்ல ‘டச்’சில் இருக்கிறார். பந்தை இந்த ஐபிஎல்-ல் நன்றாக அடிக்கிறார். ஆனால் எங்களுக்கு எதிராக எனும்போது பார்க்க நன்றாக இல்லை (சிரித்தபடி).

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

SCROLL FOR NEXT