நியூயார்க்: ஜூன் 1-ல் நடக்கவுள்ள வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தை கோலி தவறவிடக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தாமதமாக அணியுடன் இணைவதே அதற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் 9-வது பதிப்பு வரும் ஜூன் 2 முதல் 29-ம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. 27 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 55 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் கலந்து கொள்கின்றன.
2007-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி தொடரை வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இதற்காக நியூயார்க் சென்றுள்ளது. எனினும், அணியில் இன்னும் விராட் கோலி இணையவில்லை. இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள 18 வீரர்களும் நேற்று தங்களது பயிற்சியை தொடங்கிய விராட் கோலியின் வருகை குறித்து பிசிசிஐ இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.
விராட் கோலி கடைசியாக கடந்த 22-ம் தேதி ஐபிஎல் எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடினார். அதில் தோல்வியுற்ற பின், தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. சில தினங்கள் மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் முன்னாள் வீரர் ஜாகீர் கான் உடன் மும்பையில் ஒரு விழாவில் பங்கேற்றார் விராட் கோலி. அதன்பின் அவர் பொதுவெளியில் வரவில்லை.
"இரண்டு மாத காலமாக ஐபிஎல் தொடரில் விளையாடிய விராட், தற்போது சிறிய ஓய்வு எடுத்துக்கொண்டுள்ளார். விரைவில் அவர் உலகக் கோப்பை அணியில் இணைவார்" என்று பிடிஐ நிறுவனம் செய்திவெளியிட்டுள்ளது. எனினும், அவர் எப்போது அமெரிக்கா புறப்படுகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இதனால், ஜூன் 1ல் நடக்கவுள்ள வங்கதேசத்துக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தை கோலி தவறவிடக்கூடும் என்று சொல்லப்படுகிறது.