சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அசத்தி இருந்தனர்.
சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 18.3 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க தவறினர். அபிஷேக், 2 ரன்களில் வெளியேறினார். முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஹெட் வெளியேறினார். தொடர்ந்து ராகுல் திரிபாதியும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர்பிளே முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்து தடுமாறியது அந்த அணி.
நிதிஷ் ரெட்டி, மார்க்ரம், ஷாபாஸ் அகமது, அப்துல் சமாத், கிளாசன், உனத்கட், கேப்டன் கம்மின்ஸ் ஆகியோரும் ஆட்டமிழந்தனர். முறையான பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் அந்த அணி தடுமாறியது. 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் ரசல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஸ்டார்க், ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தற்போது 114 ரன்களை எடுத்தால் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும்.