கிங்ஸ்டன்: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் நேற்று அதிகாலை கிங்ஸ்டனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. கேப்டன் பிரண்டன் கிங் 45 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் விளாசினார். கைல் மேயர்ஸ் 34, ராஸ்டன் சேஸ் 32 ரன்கள் சேர்த்தனர்.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஒட்னீல் பார்ட்மேன், அன்டில் பெலுக்வயோ தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 176 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரீசா ஹென்ட்ரிக்ஸ் 51 பந்துகளில், 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் சேர்த்தார். மத்தேயு ப்ரீட்ஸ்கே 19, கேப்டன் ராஸி வான் டெர் டஸ்ஸன் 17 ரன்கள் எடுத்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் மேத்யூ ஃபோர்டு, குடகேஷ் மோதி ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஓபெட் மெக்காய் 2 விக்கெட்களை கைப்பற்றினார். 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது.