விளையாட்டு

மிஸ்பா உல் ஹக்கை விட தோனி பெற்றுத் தந்த வெற்றிகள் அதிகம்: ஷோயப் மாலிக்

செய்திப்பிரிவு

இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக்கை ஒரு போதும் ஒப்பிடுவது நியாயமாகாது என்று பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக் கூறியுள்ளார்.

ஜியோ சூப்பர் சானல் நடத்திய விவாதத்தில் பங்கேற்ற ஷோயப் மாலிக் கூறியதாவது:

ஒவ்வொரு கேப்டனுக்கும் மோசமான தொடர்கள் அமைவது தவிர்க்க முடியாததே. தோனியையும், மிஸ்பாவையும் நான் ஒப்பிடவே மாட்டேன். ஐசிசி கோப்பைகள் அனைத்தையும் வென்றவர் தோனி, மிஸ்பா அதனைச் செய்து விட முடியவில்லை.

உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணியை யார் வழிநடத்திச் செல்லவேண்டும் என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சரியாக அடையாளம் காண வேண்டும். இப்போதே முடிவெடுத்தால்தான் தேர்ந்தெடுக்கப்படும் புதிய கேப்டனுக்கு தன்னம்பிக்கையும் உற்சாகமும் ஏற்படும்.

அணித் தேர்வுக்குழுவினர் தங்கள் மனதில் யாரை நினைத்திர்க்கிறார்களோ அவரை உடனடியாக கேப்டனாக நியமிக்க வேண்டும். ஏனெனில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறும் 2015 உலகக்கோப்பைப் போட்டிகள் எளிதானதல்ல. இப்போது முதல் அதற்குத் தயார் செய்வது அவசியம்.

இலங்கையில் பாகிஸ்தான் பேட்ஸ்மென்கள் ரங்கனா ஹெராத்திற்கு எதிராக சரியான உத்திகளை வகுக்கவில்லை. இங்கிலாந்தில் இந்தியாவுக்கும் இதுதான் நடந்தது.

முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஹெராத்திடம் திணறினர். பிறகு அவரை அடித்து ஆடியிருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தான் பேட்ஸ்மென்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவேயில்லை.

என்னை ஒவ்வொரு முறை அணியில் தேர்வு செய்யும் போதும், பேட்டிங்கில் நான் எந்த நிலையில் களமிறங்க வேண்டும் என்பது பற்றி தெளிவு இல்லை.

இவ்வாறு கூறியுள்ளார் ஷோயப் மாலிக்.

பாகிஸ்தானால் ஒதுக்கப்பட்ட ஷோயப் மாலிக் தற்போது நடந்து முடிந்த கரீபீயன் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் சிறந்த வீரர் என்ற பெயரைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT