அகமதாபாத்: ஐபிஎல் டி20 தொடரின் குவாலிஃபையர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 159 ரன்களைச் சேர்த்தது.
முதல் குவாலிஃபையர் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய ஓப்பனராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 2ஆவது பந்தில் போல்டாகி ரன் எடுக்காமல் வெளியேறினார்.
2ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா 3 ரன்களில் அவுட். 5ஆவது ஓவரில் நிதிஷ் ரெட்டி 9 ரன்களிலும், ஷாபாஸ் அகமது டக்அவுட்டாக பவர் ப்ளேயில் 4 விக்கெட்டுகளை இழந்தது ஹைதராபாத். ராகுல் திரிபாதி - ஹென்ரிச் கிளாசென் சிறிது நேரம் நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராகுல் திரிபாதி அரைசதம் கடக்க, கிளாசென் 32 ரன்களில் விக்கெட்.
14 ஓவரில் பொறுப்பாக ஆடிக்கொண்டிருந்த ராகுல் திரிபாதி 55 ரன்களில் ரன்அவுட். அதே ஓவரில் சன்வீர் சிங் டக்அவுட்டாகி வெளியேற ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் காலி. 15ஆவது ஓவரில் அப்துல் சமத் 16 ரன்களுக்கு வெளியேறினார்.
16ஆவது ஓவரில் புவனேஷ்வர் குமார் டக்அவுட்டாக மோசமாக விளையாடிக்கொண்டிருந்தது ஹைதராபாத். 17 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, 133 ரன்களைச் சேரத்திருந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் 287 ரன்கள் குவித்து சாதித்த அணியா இது என்ற கேள்வியும் எழத்தான் செய்தது.
இறுதியில் ரன்களைச் சேர்க்க போராடிக்கொண்டிருக்க கேப்டன் பாட் கம்மின்ஸ் விக்கெட்டாக 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஹைதராபாத் 159 ரன்களை சேர்த்தது.
கொல்கத்தா அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளையும், சுனில் நரைன், ஹர்ஷித் ரானா, வைபவ் அரோரா, ரஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுபவர்கள் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள். தோல்வியடைந்தவர்கள் நாளை நடைபெறும் எலிமினேஷன் சுற்றில் வெற்றிபெறுபவர்களுடன் வெள்ளிக்கிழமை களம் காண்பார்கள். அந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் பங்கேற்கும்.