மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கொல்கத்தா நைட் ரைடரஸ் அணி 169 ரன்களில் சுருண்டது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணியின் ஓப்பனராக களமிறங்கிய பிலிப் சால்ட் 4 ரன்களில் முதல் ஓவரிலேயே அவுட்டானார்.
2 சிக்சர்களை விளாசிய அங்கிரிஷ் ரகுவன்ஷி 13 ரன்களில் 3ஆவது ஓவரில் விக்கெட்டானார். அதே ஓவரில் ஸ்ரேயஸ் ஐயர் 6 ரன்களில் அவுட்டாகி வெளியேற, சுனில் நரைன் 8 ரன்களில் போல்டானார். அடுத்து ரின்கு சிங் 9 ரன்களில் கிளம்ப, 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 83 ரன்களைச் சேர்த்தது கொல்கத்தா.
தொடர்ந்து கைகோத்த வெங்கடேஷ் ஐயர் - மணீஷ் பாண்டே விக்கெட் இழப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 36 பந்துகளில் அரைசதம் கடந்தார் வெங்கடேஷ் ஐயர்.
2 சிக்சர்களை விளாசி 42 ரன்களைச் சேர்த்த மணீஷ் பாண்டேவை ஹர்திக் பாண்டியா விக்கெட்டாக்கினார். அவரைத் தொடர்ந்து ரஸல் 7 ரன்களிலும், ரமன்தீப் சிங் 2 ரன்களிலும், மிட்செல் ஸ்டார்க் போல்டாக சீட்டுக்கட்டாக விக்கெட்டுகள் சரிந்தன.
போராடி ரன்களைச் சேர்த்துக்கொண்டிருந்த வெங்கடேஷ் ஐயர் 70 ரன்களுக்கு போல்டாக 169 ரன்களுக்குள் சுருண்டது கொல்கத்தா. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில், பும்ரா, நுவான் துஷாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டையும், பியூஷ் சாவ்லா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.