விளையாட்டு

ஆயுஷ் பதோனி ரன் அவுட்: விமர்சனத்துக்கு உள்ளான மூன்றாவது நடுவரின் முடிவு

செய்திப்பிரிவு

லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆயுஷ் பதோனியை ரன் அவுட் செய்தார் மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன். அவர் அவுட் என மூன்றாவது நடுவர் அறிவித்தார். இந்த சூழலில் நடுவரின் முடிவு விமர்சனத்துக்கு உள்ளான வகையில் அமைந்துள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை அன்று இரு அணிகளும் லக்னோவில் விளையாடின. இதில் லக்னோ அணி இலக்கை விரட்டியது. கடைசி இரண்டு ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார்.

முதல் பந்தை ஷார்ட் மற்றும் வொய்டாக அவர் வீசி இருந்தார். அதை எதிர்கொண்ட லக்னோ வீரர் பதோனி, பாயிண்ட் திசையில் கட் செய்து இரண்டு ரன் எடுக்க முயற்சித்தார். முதல் ரன்னை எடுத்த அவர், இரண்டாவது ரன்னை எடுக்க முயன்ற போது ரன் அவுட் ஆனார்.

மும்பை வீரர் நமன் திர், பந்தை தடுத்து, விக்கெட் கீப்பர் கிஷன் வசம் த்ரோ செய்தார். அதை சரியாக பற்றிய கிஷன், ஸ்டம்பை தகர்க்க தவறினார். இருந்தும் இரண்டாவது வாய்ப்பில் அதை செய்தார். அதற்குள் பதோனி டைவ் அடித்து கிரிஸ் லைனை கடக்க முயன்றார்.

அது குறித்த முடிவை எடுக்க மூன்றாவது நடுவரை அணுகினர் கள நடுவர்கள். டிவி ரீப்ளேயில் கிரிஸ் லைனை பதோனி கடந்த போது, அவரது பேட் தரையில் படாதது போல இருந்தது. அதை சொல்லி அவுட் கொடுத்தார் மூன்றாவது நடுவர்.

மூன்றாவது நடுவரின் இந்த முடிவு களத்தில் இருந்த பதோனி, லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் ரசிகர்களுக்கு அதிருப்தியை தந்தது. அதே நேரத்தில் பேட் தரையில் படவில்லை என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்தனர். இந்த சூழலில் 4 பந்துகள் எஞ்சியிருக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றது லக்னோ அணி.

SCROLL FOR NEXT