ஆக்லாந்து: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டேவன் கான்வே அணிக்கு திரும்பி உள்ளார். அதேவேளையில் ரச்சின் ரவீந்திரா, மேட் ஹென்றிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் 1-ம்தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட நியூஸிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணியை வில்லியம்சன் 4-வது முறையாக வழிநடத்த உள்ளார்.
கட்டை விரல் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள தொடக்க வீரரான டேவன் கான்வே அணிக்கு திரும்பி உள்ளார். வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி, ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் இவர்கள் இருவர் மட்டுமே டி20 உலகக் கோப்பையில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள். வேகப்பந்து வீச்சாளர் பென் சீயர்ஸ் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களான ஆடம் மில்னே, கைல் ஜேமிசன் ஆகியோர் காயம் காரணமாக தேர்வாகவில்லை.
அணி விவரம்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், டிரெண்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேவன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, பென் சீயர்ஸ் (மாற்று வீரர்).