வில் ஜேக்ஸ் மற்றும் விராட் கோலி 
விளையாட்டு

GT vs RCB | 201 ரன்கள் இலக்கை 16 ஓவர்களில் எட்டிய ஆர்சிபி; வில் ஜேக்ஸ் அதிரடி ஆட்டம்!

செய்திப்பிரிவு

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 45-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்சிபி. வில் ஜேக்ஸ், 41 பந்துகளில் சதம் விளாசி ஆர்சிபி வெற்றி பெற உதவினார்.

இந்தப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ், 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் பேட்ஸ்மேன்களில் சாய் சுதர்ஷன் 84 ரன்கள், ஷாருக்கான் 58 ரன்கள் மற்றும் டேவிட் மில்லர் 26 ரன்கள் எடுத்தனர். ஆர்சிபி பவுலர்களில் சிராஜ், ஸ்வப்னில் சிங் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆர்சிபி விரட்டியது. கேப்டன் டூப்ளசி 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வில் ஜேக்ஸ் களத்துக்கு வந்தார். கோலி மற்றும் ஜேக்ஸ் என இருவரும் குஜராத் பவுலர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

16 ஓவர்களில் 206 ரன்களை எட்டியது ஆர்சிபி. அதன் மூலம் 9 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. ஜேக்ஸ், 41 பந்துகளில் சதம் பதிவு செய்தார். 5 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களை அவர் விளாசினார். கோலி, 44 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். குஜராத் அணியின் ரஷித் கான், மோகித் சர்மா மற்றும் நூர் அகமது போன்ற பந்து வீச்சாளர்கள் அதிக ரன்களை கொடுத்திருந்தனர். 10 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பெற்றுள்ளது ஆர்சிபி.

ஆட்ட நாயகன் விருதை வில் ஜேக்ஸ் பெற்றார். ரஷித் கான் வீசிய 16-வது ஓவரில் 29 ரன்கள் எடுத்தது ஆர்சிபி. அதில் 28 ரன்களை வில் ஜேக்ஸ் எடுத்தார். 6,6,4,6,6 என ரன்கள் எடுத்து அவர் சதம் கண்டார். அதே நேரத்தில் அணியையும் வெற்றி பெற செய்தார்.

SCROLL FOR NEXT