ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 206 ரன்களை சேர்த்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைப்பெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஓப்பனராக களமிறங்கிய ஃபாஃப் டூப்ளசியை 25 ரன்களில் 4ஆவது ஓவரில் வெளியேற்றினார் நடராஜன். அடுத்து வந்த வில் ஜாக்ஸும் 6 ரன்களில் போல்டானார். மறுபுறம் விராட் கோலி நிலைத்து நின்று ஆடி ரன்களைச் சேர்த்தார். அவருக்கு உறுதுணையாக நின்ற ரஜத் படிதார் 5 சிக்சர்கள் விளாசி அரைசதம் கடந்தார். ஆனால் உனத்கட் வீசிய 13ஆவது ஓவரில் 50 ரன்களுடன் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் 51 ரன்களில் கிளம்ப 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 142 ரன்களைச் சேர்த்திருந்தது. அடுத்து வந்த மஹிபால் லோமரோர் 7 ரன்களுக்கு அவுட். கேமரூன் கிரீன் பொறுப்பாக விளையாட, தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கடைசி பந்தில் ஸ்வப்னில் சிங் 12 ரன்களில் விக்கெட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 206 ரன்களை சேர்த்தது.
ஹைதராபாத் அணி தரப்பில், உனத்கட் 3 விக்கெட்டுகளையும், நடராஜன் 2 விக்கெட்டையும், பாட் கம்மின்ஸ், மயங்க் மார்கண்டே ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.