விராட் கோலி 
விளையாட்டு

நடுவருடன் வாக்குவாதம் செய்ததற்காக விராட் கோலிக்கு 50 சதவீதம் அபராதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலிக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் 223 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் தொடக்க வீரரான விராட் கோலி, ஹர்ஷித் ராணா இடுப்பு உயரத்துக்கு புல்டாஸாக வீசிய பந்தை அடித்த நிலையில் அது ஹர்ஷித் ராணாவிடமே கேட்ச் ஆனது. இது நோபால் என பெங்களூரு அணி தரப்பில் முறையிடப்பட்டது. ஆனால் இதை ஹவாக்-ஐ தொழில்நுட்பத்துடன் ஆய்வு செய்த 3-வது நடுவர், கோலி அவுட் என அறிவித்தார்.

இதனால் விரக்தியடைந்த கோலி கள நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது எந்த முறையில் அவுட் கொடுக்கப்பட்டது என களநடுவர்கள் விளக்கம் அளித்தனர். இதன் பின்னரே விராட் கோலி களத்தில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் விராட் கோலி, நடத்தை விதிமுறைகளை மீறியதாக போட்டியின் ஊதியத்தில் 50 சதவீதத்தை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

SCROLL FOR NEXT