புதுடெல்லி: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் நிச்சயம் இடம் பெறுவார் என டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் அமெரிக்காவுக்கு செல்வது உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் நிச்சயம் இடம் பெறுவார். அவர் சிறந்த வீரர். அணியில் அவரை தேர்வு செய்வது அவசியம். ஆட்டத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். அவர் களத்துக்கு திரும்பி உள்ளதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளோம். விக்கெட்டுகளுக்கு இடையில் சிறப்பாக ஓடுகிறார். சிறந்த முறையில் கீப்பிங் பணியை கவனிக்கிறார்.
விபத்துக்குப் பிறகு நான் அவரைப் பார்த்தபோது வருத்தம் தந்தது. ஆனால், தற்போது மீண்டு வந்துள்ளார். சிறப்பாக விளையாடுகிறார். அது அவரது முகத்தில் புன்னகை பூக்க செய்துள்ளது. அது இந்த நேரத்தில் முக்கியமானது” என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் ஆங்கரிங் இன்னிங்ஸ் ஆடும் பேட்ஸ்மேன்கள் அதிகம் தேவையில்லை. அதிரடி பாணியில் ஆடும் பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் 2 அல்லது 3 விக்கெட்கள் சரியும் போது சூழலுக்கு ஏற்ப விளையாடும் வகையிலான வீரர்களாக அவர்கள் இருக்க வேண்டும் என பாண்டிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடப்பு ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. ஜுன் 1 முதல் 29-ம் தேதி வரை இந்த தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா உட்பட 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தம் 55 போட்டிகள் விளையாடப்பட உள்ளது.