வெற்றியை கொண்டாடும் கொல்கத்தா வீரர்கள் 
விளையாட்டு

KKR vs RCB | ஸ்டார்க்கை துவம்சம் செய்த ஆர்சிபி: கடைசி பந்தில் கொல்கத்தா வெற்றி!

செய்திப்பிரிவு

கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் 36-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. 223 ரன்கள் என்ற இலக்கை விரட்டியது ஆர்சிபி. இருந்தும் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா.

கொல்கத்தாவின் ஈடன் - கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்து வீசியது. 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது கொல்கத்தா.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சால்ட் 14 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். கேப்டன் ஸ்ரேயஸ் 50 ரன்கள், ரிங்கு சிங் 24 ரன்கள், ரஸல் 27 ரன்கள், ரமன்தீப் சிங் 24 ரன்கள் எடுத்தனர்.

223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆர்சிபி விரட்டியது. விராட் கோலி 18 ரன்களிலும், டூப்ளசி 7 ரன்களிலும் வெளியேறினர். வில் ஜேக்ஸ் மற்றும் பட்டிதார் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தனர். இருவரும் அரைசதம் கடந்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து கிரீன் மற்றும் லோம்ரோர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சுயாஷ் பிரபுதேசாய் 24 ரன்கள் மற்றும் தினேஷ் கார்த்திக் 25 ரன்கள் எடுத்து வெளியேறினர். கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டார்க் வீசிய அந்த ஓவரில் முதல் 4 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் விளாசி இருந்தார் கரண் சர்மா.

2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கரண் சர்மா ஆட்டமிழந்தார். 7 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார் அவர். கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே ஆர்சிபி அணியால் எடுக்க முடிந்தது. அதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது.

கடைசி பந்தில் ஆர்சிபியின் 2-வது ரன் முயற்சியை கொல்கத்தா விக்கெட்கீப்பர் சால்ட், ஸ்டம்புகளை தகர்த்து தடுத்தார். அது வெற்றியை உறுதி செய்தது. இந்தப் போட்டியில் 3 ஓவர்கள் வீசிய ஸ்டார்க், 55 ரன்களை கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

SCROLL FOR NEXT