கொல்கத்தா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 223 ரன்களை சேர்த்துள்ளது. இதில் சுனில் நரைன் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.
கொல்க்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தாவின் ஓப்பனர்களாக களமிறங்கினர் சுனில் நரைன் - பிலிப் சால்ட். 4-வது ஓவரில் அவேஷ்கான் வீசிய பந்தில் 10 ரன்களில் அவுட்டானார் பிலிப் சால்ட்.
அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி, சுனிலுடன் இணைந்து விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார். இதனால் அந்த அணி 10 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 100 ரன்களைச் சேர்த்தது.
குல்தீப் சென் வீசிய 11வது ஓவரில் அங்கிரிஷ் ரகுவன்ஷி 30 ரன்களில் கேட்ச் கொடுத்து விக்கெட்டனார். ஸ்ரேயஸ் ஐயர் 11 ரன்களில் வெளியேற, ஒற்றை ஆளாக நின்று களத்தில் பந்துகளை விளாசித் தள்ளிக்கொண்டிருந்தார் சுனில் நரைன். 49 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
ஆந்த்ரே ரஸ்ஸல் 13 ரன்களில் கிளம்ப, அடுத்து சுனில் நரைன் 109 ரன்களில் போல்டானார். வெங்கடேஷ் ஐயர் 8 ரன்களில் அவுட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா 223 ரன்களை குவித்தது. ரின்கு சிங் 20 ரன்களுடனும், ரமன்தீப் சிங் 1 ரன்னுடனும் களத்தில் விக்கெட்டாகமல் இருந்தனர்.
ராஜஸ்தான் அணி தரப்பில் அவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், போல்ட், சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.