பெங்களூரு: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 288 ரன்கள் என்ற இலக்கை விரட்டி, 262 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்நிலையில், தோல்விக்கும் பிறகு ஆர்சிபி கேப்டன் டூப்ளசி தெரிவித்தது.
“சிறந்த பேட்டிங் செயல்திறனை நாங்கள் வெளிப்படுத்தினோம். நல்ல டி20 கிரிக்கெட் விக்கெட்டாக இருந்தது. இயன்றவரை இலக்கை நெருங்கி செல்ல முயற்சித்தோம். ஆனால், 280 ரன்களை எட்டுவது கடினமானது. சில விஷயங்களை முயற்சி செய்து பார்த்தோம். வேகப்பந்து வீச்சாளர்கள் சிரமப்பட்டனர். பேட்டிங்கிலும் சில இடங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
பவர்பிளே ஓவர்கள் முடிந்த பிறகும் ரன் ரேட்டில் சரிவு கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அணியின் வீரர்கள் இலக்கை துரத்திய போது ஃபைட் பேக் செய்தனர். 30-40 ரன்களை கூடுதலாக கொடுத்துவிட்டோம்” என டூப்ளசி தெரிவித்தார்.
கடந்த 2017 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 49 ரன்களில் ஆல் அவுட் ஆனது ஆர்சிபி. அதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த ரன்களை எடுத்த அணியாக ஆர்சிபி அறியப்படுகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடப்பு சீசனில் 287 ரன்களை கொடுத்துள்ளது ஆர்சிபி. இதன் மூலம் ஐபிஎல் களத்தில் அதிக ரன்களை கொடுத்த அணியாகவும் ஆர்சிபி அறியப்படுகிறது.
நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே ஆர்சிபி பெற்றுள்ளது. இதில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது அந்த அணி. அதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் 2 புள்ளிகளுடன் உள்ளது.