டிராவிஸ் ஹெட் 
விளையாட்டு

எஸ்ஆர்எச் அணி புதிய சாதனை: ஆர்சிபிக்கு எதிராக 287 ரன்கள் குவிப்பு @ ஐபிஎல்

செய்திப்பிரிவு

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட்டுகளை இழந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்களை குவித்துள்ளது. இதில் டிராவிஸ் ஹெட் 102 ரன்களை குவித்தார். இதன்மூலம் அந்த அணி புதிய ஐபிஎல் சாதனை படைத்தது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த தேர்வு எத்தனை மோசமானது என்பதை ஹைதராபாத் அணியின் ஓப்பனர்களான அபிஷேக் சர்மாவும், டிராவிஸ் ஹெட்டும் உணர்த்தினர். தங்களை நோக்கி வரும் பந்துகளை இருவரும் பாட்னர்ஷிப் அமைத்து விளாசினர். விக்கெட் எடுக்க முடியாமல் ஆர்சிபி பவுலர்கள் திணற 8 ஓவர்களுக்கு 108 ரன்களைச் சேர்த்தது இந்த இணை.

ரீசே டோப்லி வீசிய 9ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா 34 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 8 சிக்சர்களை விளாசி 41 பந்துகளில் 102 ரன்களைச் சேர்ந்த டிராவிஸ் ஹெட்டை 13-வது ஓவரில் லாக்கி பெர்குசன் அவுட்டாக்கினார். ஆர்சிபிக்கு அந்த விக்கெட் பெரும் நிம்மதியைக் கொடுத்தது.

7 சிக்சர்களை விளாசி சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த கிளாசென் 67 ரன்களில் களத்திலிருந்து வெளியேறினார். அடுத்து வந்த அப்துல் சமத் - எய்டன் மார்க்ரம் கூட்டணி அமைத்து கடைசி நேரத்தில் சிக்ஸ், பவுண்டரி என விளாசித் தள்ள நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் 287 ரன்களை குவித்து மிரட்டியது. ஆர்சிபி அணி தரப்பில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளையும், ரீசே டோப்லி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

சாதனை: முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் மார்ச் 27-ம் தேதி நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்களை குவித்து அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் சாதனையை படைத்திருந்தது ஹைதராபாத். தற்போது தனது ரெக்கார்டை தானே முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது. அதன்படி ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் என்பது ஹைதராபாத்தின் இன்றைய 287 என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக சிக்சர்ஸ்: ஐபிஎல் தொடரில் அதிகபட்ச சிக்சர்களை விளாசிய அணி என்ற பெருமையை பெற்றுள்ளது ஹைதராபாத். இந்த போட்டியில் மட்டும் 22 சிக்சர்கள் விளாசப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT