விளையாட்டு

பள்ளி நாட்களில் நன்றாக விளையாடியதற்காக புறக்கணிக்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல்

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மென் கிளென் மேக்ஸ்வெல் நன்றாக விளையாடியதன் காரணமாகவே அவர் படித்த பள்ளி அவரைப் புறக்கணித்தது.

இன்று ரிவர்ஸ் ஷாட்டில் பெரிய அளவுக்கு பவுலர்களை மிரட்டி வரும் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் அவரது பள்ளியினால் ஒதுக்கப்பட்ட ஒரு கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது வலது கை பேட்ஸ்மெனாக தொடக்கப் பள்ளி காலத்திலேயே பெரிய அச்சுறுத்தலாகத் திகழ்ந்த கிளென் மேக்ஸ்வெலை அழைத்து இனி இடது கையில் விளையாடினால்தான் அணியில் இருக்கப்போகிறாய் என்று பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் இவரை ஒடுக்கியுள்ளனர்.

அதன் பிறகு இடது கையில் பேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளார் மேக்ஸ்வெல். இன்று உலகின் சிறந்த பவுலர்கள் ஒரு நல்ல பந்தை வீசி விட்டு மேக்ஸ்வெல் அதனை ரிவர்ஸ் ஷாட்டில் சிக்ஸ் அடிக்கும்போது மேக்ஸ்வெல் மீது வெறுப்பை உமிழ்கின்றனர். உண்மையில் மேக்ஸ்வெல் பயின்ற ஆரம்பகால மெல்பர்ன் பள்ளி விளையாட்டு ஆசிரியர்களைத்தான் குறை கூற வேண்டும்.

அன்றே அவரை வலது கையில் ஆடவிட்டு அணியில் ஒடுக்காமல் எடுத்திருந்தால் இன்று பழிதீர்க்கும் விதமாக இடது கை மட்டையாளர் போல் அவர் ரிவர்ஸ் ஷாட் ஆட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது.

ஜிம்பாவேயிற்கு எதிராக 46 பந்துகளில் 93 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல் தனது ஆரம்பப் பள்ளி நாட்களை நினைவு கூர்கையில், “வலது கை பேட்ஸ்மெனாக நன்றாக ஆடினேன், ஆனால் என்னைப் புறக்கணித்தனர். தடையே விதித்தனர். நான் உடனே கிரிக்கெட்டை சிறிது காலம் விடுத்து கூடைப்பந்து விளையாடினேன்.

அதன் பிறகு பள்ளீயில் இடது கையிலேயே விளையாடினேன் காரணம் நான் வலது கையில் ஆட அனுமதி கிடையாது. மேலும் எனது தந்தை புதிது புதிதாக ஆட என்னை வலியுறுத்துவார். அப்படிப் பழகியதுதான் ரிவர்ஸ் ஷாட்.

மேலும் ஆஸ்திரேலிய அணியில் உற்சாகத்துடன் மக்களை ஈர்க்கும் விதத்தில் ஆடுவது ஊக்குவிக்கப்படும், அதுவும் எனது பலவிதமான ஷாட்களை ஊக்குவித்தது”

என்று ஆஸ்திரேலிய இணையதளம் ஒன்றில் கூறியுள்ளார் கிளென் மேக்ஸ்வெல். சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் மீண்டும் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியைக் காண இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

SCROLL FOR NEXT