தோனி 
விளையாட்டு

MI vs CSK | ஹாட்ரிக் சிக்ஸர் விளாசிய தோனி: மும்பைக்கு 207 ரன்கள் இலக்கு

செய்திப்பிரிவு

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 29-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 206 ரன்கள் எடுத்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே என இருவரும் இதில் அரை சதம் பதிவு செய்தனர். கடைசி ஓவரில் களம் கண்ட தோனி, 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்.

மும்பை - வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரச்சின் ரவீந்திரா மற்றும் ரஹானே இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். 8 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே, 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் ருதுராஜ் களத்துக்கு வந்தார். பவர்பிளே ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்திருந்தது சிஎஸ்கே.

8-வது ஓவரில் 21 ரன்கள் எடுத்த நிலையில் ரச்சின் ரவீந்திரா வெளியேறினார். அவரை மும்பை அணியின் ஸ்ரேயஸ் கோபால் வெளியேற்றினார். தொடர்ந்து ஷிவம் துபே களத்துக்கு வந்தார். ஹர்திக் வீசிய 10-வது ஓவரில் மூன்று பவுண்டரிகளை துபே விளாசினார். 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்திருந்தது சிஎஸ்கே. 13-வது ஓவரில் அரைசதம் கடந்தார் ருதுராஜ். ரொமாரியோ ஷெப்பர்ட் வீசிய 14-வது ஓவரில் 22 ரன்கள், ஆகாஷ் மெத்வால் வீசிய 15-வது ஓவரில் 17 ரன்கள் எடுக்கப்பட்டது.

28 பந்துகளில் அரைசதம் கடந்தார் துபே. 40 பந்துகளில் 69 ரன்கள் எடுத்த ருதுராஜ் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை ஹர்திக் பாண்டியா கைப்பற்றினார். ஹர்திக் வீசிய 16-வது ஓவரில் 1 விக்கெட் கைப்பற்றி 2 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். 5-வது பேட்ஸ்மேனாக களம் கண்ட மிட்செல் இன்னிங்ஸை நிதானமாக அணுகினார். அடுத்த மூன்று ஓவர்களில் 29 ரன்கள் எடுக்கப்பட்டது.

14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த மிட்செல், கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரை ஹர்திக் வீசி இருந்தார். அடுத்ததாக தோனி களம் கண்டார். அவர் எதிர்கொண்ட முதல் மூன்று பந்துகளும் சிக்ஸர். அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அதோடு சென்னை சூப்பர் கிங்ஸின் பேட்டிங் இன்னிங்ஸ் முடிந்தது. 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார் தோனி. இறுதி வரை ஆடிய துபே 38 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தார்.

மும்பை அணிக்காக 3 ஓவர்கள் வீசிய முகமது நபி 19 ரன்கள் கொடுத்திருந்தார். பும்ரா, 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்திருந்தார். கடைசி ஓவரில் 26 ரன்கள் கொடுத்திருந்தது மும்பை. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே. மும்பை இந்தியன்ஸ் அணி 207 ரன்கள் எடுத்தால் இந்தப் போட்டியில் வெற்றி பெறலாம்.

SCROLL FOR NEXT