விளையாட்டு

“எனது செயலால் சிலர் ஏமாற்றம் அடைந்திருப்பர்” - கம்பீரை கட்டி அணைத்தது குறித்து கோலி

செய்திப்பிரிவு

மும்பை: வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை செய்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூருவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியின் போது, அந்த அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீரை பரஸ்பரம் ஓவருக்கொருவர் கட்டி அணைத்தது குறித்து ஆர்சிபி வீரர் விராட் கோலி பேசியுள்ளார்.

கடந்த ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டார் கம்பீர். அப்போது லக்னோவில் நடைபெற்ற போட்டியில் கோலி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் கம்பீர். அது கடந்த சீசனில் பெரிய அளவில் கவனம் பெற்றது. அவருடன் எல்எஸ்ஜி வீரர் நவீன்-உல்-ஹக்கும் இணைந்து கொண்டார். இந்தச் சூழலில் நடப்பு சீசனில் கோலியும், கம்பீரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும்போது என்ன நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு சர்ப்ரைஸ் தந்தனர்.

“எனது செயலால் சிலர் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள். நான் நவீனை கட்டி அணைத்தேன். கவுதம் கம்பீர் பாய் (அண்ணன்) என்னை கட்டி அணைத்தார். இந்த செயலால் அவர்களுக்கு வேண்டிய மசாலா கிடைக்காமல் போயிருக்கும்” என தனியார் நிகழ்வு ஒன்றில் கோலி தெரிவித்தார்.

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் போது நவீன் மற்றும் கோலி இடையிலான முரண் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

“நான் அதிகம் விரும்பும் எனது இன்னிங்ஸ் எது என கேட்டால், மெல்பர்ன் நகரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பையில் ஆடிய இன்னிங்ஸ்தான். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நான் ரோகித் உடன் இணைந்து விளையாடி வருகிறேன். இந்தப் பயணம் அபாரமானது. அவரது வளர்ச்சியை பக்கமிருந்து நான் பார்த்து வருகிறேன். இப்போது இந்திய அணியை அவர் வழி நடத்துவதும் அற்புதமானது” என கோலி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT