மும்பை: கடந்த 2011-ல் இதே நாளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடி இருந்தார் ரோகித் சர்மா. அதன் பிறகு அவர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் களத்தில் 5 முறை பட்டம் வென்று வரலாறு படைத்தது. இந்த 13 ஆண்டுகால பயணத்தை கொஞ்சம் ரீவைண்ட் செய்வோம்.
2008 முதல் 2010 ஐபிஎல் சீசன் வரையில் ரோகித் சர்மா டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அதன் பிறகு 2011 சீசனுக்காக 2 மில்லியன் டாலர் கொடுத்து அவரை ஏலத்தில் வாங்கியது மும்பை. 2013 சீசனில் அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையிலான அணியில் அந்த சீசனில் சச்சின் விளையாடினார்.
அதுவரை ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வெல்லாமல் இருந்த மும்பை அணி அந்த சீசனில் சாம்பியன் ஆனது. தொடர்ந்து 2015, 2017, 2019 மற்றும் 2020 என ஐந்து முறை பட்டம் வென்றது. 2013-ல் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 202 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 5,159 ரன்களை எடுத்துள்ளார். ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார். ஒட்டுமொத்தமாக ஐபிஎல் அரங்கில் 100+ கேட்ச்களை பிடித்துள்ளார். அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் 2-வது இடத்தில் உள்ளார்.
நடப்பு சீசனில் அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம். இந்திய அணியின் கேப்டனாக உள்ள அவரது இந்த நிலை குறித்து பலரும் பல்வேறு விதமான கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
எதிர்வரும் சீசனுக்கு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு அவர் வேறு அணிக்கு மாற வாய்ப்பு உள்ளதாகவும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் பல இளம் வீரர்கள் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.