ஜெய்ப்பூர்: ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் எங்கள் அணி வீரர் ஜாஸ் பட்லர் பவர்பிளே ஓவர்களை மிகச்சரியாக பயன்படுத்தினார் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் புகழாரம் சூட்டினார்.
ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 72 பந்துகளில் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் விளையாடிய ராஜஸ்தான் அணி,19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. ஜாஸ் பட்லர் 58 பந்துகளில் 100 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார்.
வெற்றி குறித்து கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது: 190 ரன்களுக்கு குறைவாக இலக்கு இருந்ததால் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தோம். பவர்பிளேவில் வீசப்பட்டஓவர்களை ஜாஸ் பட்லர் மிகச் சிறப்பாக பயன்படுத்தினார். அவர் ஃபார்முக்குத் திரும்பி இருப்பது எங்களுக்கு கூடுதல் பலம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜாஸ் பட்லர் கூறும்போது, “இன்றைய ஆட்டத்தில் எங்களுக்கு சிறிது அதிர்ஷ்டம் இருந்தது. கடந்த சில ஆட்டங்களாக பெரிய ஸ்கோரை எடுக்க முடியவில்லை. கடினமாக உழைத்தால் அதற்கு சரியான பலம் கிட்டும். உங்கள் மனம் சொல்வதைக் கேட்டால்வெற்றி நிச்சயம். இன்று எனதுமனம் சொன்னபடி விளையாடினேன்" என்றார்.
ராஜஸ்தான் அணி 4 போட்டிகளில் விளையாடி 4-லும் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 5 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி, 4 தோல்வியை பெற்றுள்ளது.