கோப்புப்படம் 
விளையாட்டு

‘ரசிகர்களுக்காக தோனி களம் காண்பார்’ - மைக் ஹஸ்ஸி நம்பிக்கை

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பேட்டிங் ஆர்டரில் முன்கூட்டியே களமிறங்கி ஆட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், அது குறித்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தகவல் வெளியிட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியின் போது மிட்-இன்னிங்ஸ் உரையாடலாக வர்ணனையாளர்கள், அவருடன் பேசியிருந்தனர். “தோனி எனும் வீரர் அணியில் இருந்தால் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கான ஆதரவு அமோகமாக இருக்கும்” என்றார். தொடர்ந்து அவரிடம் பேட்டிங் ஆர்டரில் தோனியின் பொசிஷன் குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது.

“கடந்த சீசனுக்கு பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் முழு உடற்தகுதி பெற்று வருகிறார். அதனால் அவர் பேட் செய்ய முன்கூட்டியே களம் காண விரும்பவில்லை. ஆனால், பார்வையாளர்கள் அவர் பேட் செய்வதை பார்க்க விரும்புகிறார்கள். அவரும் அழகாக பேட் செய்கிறார், சீசனுக்காக சிறப்பான முறையில் தயார் ஆகியுள்ளார். அந்த வகையில் அவரிடமிருந்து சில ஹிட்களை நிச்சயம் நாம் எதிர்பார்க்கலாம் என நம்புகிறேன்” என ஹஸ்ஸி தெரிவித்தார்.

42 வயதான தோனி, நடப்பு சீசனில் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். சீசனின் முதல் இரண்டு போட்டிகளில் அவர் பேட் செய்யவில்லை. விசாகப்பட்டினத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் 37 ரன்கள் விளாசியிருந்தார். இருந்தும் சென்னை அந்தப் போட்டியில் தோல்வியை தழுவியது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 2 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் எடுத்தார். சென்னை அணி வரும் 8-ம் தேதி கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்தப் போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT