மயங்க் யாதவ் மற்றும் சவுதி 
விளையாட்டு

”அதிவேகத்துடன் கன்ட்ரோல் அபாரம்!” - மயங்க் யாதவ் பந்துவீச்சை சிலாகிக்கும் டிம் சவுதி

செய்திப்பிரிவு

வெலிங்டன்: நடப்பு ஐபிஎல் சீசனில் அதிவேகமாக பந்து வீசி வரும் மயங்க் யாதவின் அடுத்தடுத்த முன்னேற்றத்தைக் காண தான் ஆவலுடன் இருப்பதாக நியூஸிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் சவுதி தெரிவித்துள்ளார். சராசரியாக 150+ கிலோ மீட்டர் வேகத்தில் மயங்க் யாதவ் பந்து வீசி வருவது குறிப்பிடத்தக்கது.

“அணியை வழிநடத்தி வருவது சமயங்களில் சவாலாக உள்ளது. இருந்தாலும் இந்தப் பணியை நான் விரும்பி செய்து வருகிறேன். இதற்கு முன்பு அணியை வழிநடத்திய வில்லியம்சன் மற்றும் டாம் லேதம் ஆகியோர் அணியில் இருப்பது எனக்கு சாதகம். இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட உள்ளோம். அது கடினமான சோதனையாக இருக்கும்.

சொந்த மண்ணில் இந்தியா வலுவான அணி. ஆடுகளச் சூழலும் சவாலானதாக இருக்கும். அங்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சிறப்பு சேர்க்கும். இந்தியாவில் இருந்து அதிகளவிலான வேகப்பந்து வீச்சாளர்கள் உருவெடுத்து வருகிறார்கள். அதில் ஒருவரான மயங்க் யாதவ் அபாரமாக செயல்பட்டு வருகிறார். கன்ட்ரோல் உடன் பந்து வீசுகிறார்.

பெரும்பாலும் வேகமாக பந்து வீசும் பவுலர்கள் எல்லா நேரமும் பந்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் அதிவேகம் மற்றும் கன்ட்ரோல் என இரண்டும் மயங்க் கொண்டுள்ளார். இதுவரை இரண்டு ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும் அதில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டையும் தாண்டி அவரது முன்னேற்றத்தைக் காண ஆவலுடன் உள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

21 வயதான மயங்க் யாதவ், டெல்லியை சேர்ந்தவர். தனது முதல் இரண்டு போட்டிகளில் மொத்தமாக 6 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். அவர் குறித்து முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிராட், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் முன்னாள் இந்திய வீரர்கள் என பலரது பாராட்டுகளை பெற்றுள்ளார்.

எதிர்வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் அவர் இடம்பெற வேண்டும் என சொல்லப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா பயணிக்க உள்ள இந்திய அணியிலும் அவர் இடம்பெற வேண்டும் என சொல்லப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT