அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.
200 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி சஷாங்க் சிங் 29 பந்துகளில் விளாசிய 61 ரன்களின் உதவியாலும், அஷுதோஷ் சர்மா 17 பந்துகளில் சேர்த்த 31 ரன்களின் உதவியாலும் 19.5 ஓவரில் வெற்றிக் கோட்டை கடந்தது. 32 வயதான ஆல்ரவுண்டரான சஷாங்க் சிங் தனது தாக்குதல் ஆட்டத்தால் 4 சிக்ஸர்களையும், 6 பவுண்டரிகளையும் விளாசியிருந்தார்.
ஆட்ட நாயகன் விருது வென்ற அவர் கூறும்போது, “குஜராத் அணியில் உள்ள பந்து வீச்சாளர்கள் விளையாட்டின் ஜாம்பவான்கள். ஆனால் களத்துக்குள் வரும் போது நான்தான் சிறந்த வீரர் என கருதிக்கொண்டேன். இதற்கு முன்னர், அதிக அளவிலான ஆட்டங்களில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இங்கு பஞ்சாப்அணியின் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன்.
வெற்றி மகிழ்ச்சியில் மூழ்க நினைக்கிறேன். இவற்றையெல்லாம் இதற்கு முன்னர் கற்பனை செய்து பார்த்துள்ளேன். ஆனால் இவை நிஜமாக மாறியபோது, அதற்காக செய்த முயற்சி குறித்து பெருமைகொள்கிறேன். வீசப்படும் பந்துகளுக்கு தகுந்தவாறு பயிற்சியாளர் எதிர்வினையாற்ற கூறினார். அந்த வகையில் எனது ஷாட்களை மேற்கொண்டேன். ஆடுகளம் சிறப்பாக இருந்தது. நல்ல பவுன்ஸும் இருந்தது” என்றார்.