படம்: பிசிசிஐ 
விளையாட்டு

RCB vs LSG | மயங்க் யாதவ் அபார பந்துவீச்சு: ஆர்சிபி ஆல் அவுட் - லக்னோ வெற்றி!

செய்திப்பிரிவு

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 15-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 28 ரன்களில் வென்றுள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். இந்த சீசனில் முதல் முறையாக ஆல் அவுட் ஆன அணியாக ஆர்சிபி உள்ளது. அதோடு சொந்த மைதானத்தில் இரண்டாவது போட்டியில் தோல்வியை தழுவி உள்ளது.

பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் ஆர்சிபி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த லக்னோ 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆர்சிபி விரட்டியது. கேப்டன் டூப்ளசி மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து கோலி ஆட்டமிழந்தார். அவரை தமிழகத்தை சேர்ந்த மணிமாறன் சித்தார்த் வெளியேற்றினார். 19 ரன்கள் எடுத்த டூப்ளசி ரன் அவுட் ஆனார். அவர் தேவ்தத் படிக்கல் டைரக்ட் ஹிட் செய்து வெளியேற்றினார்.

தொடர்ந்து கிளென் மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் கிரீனை அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற்றினார் மயங்க் யாதவ். அனுஜ் ராவத் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். 29 ரன்கள் எடுத்து ஆர்சிபி அணிக்கு நம்பிக்கை தந்த ரஜத் பட்டிதரை அவுட் செய்தார் மயங்க்.

தினேஷ் கார்த்திக், மயங்க் தாகர், லோம்ரோர், சிராஜ் ஆகியோர் விக்கெட்டை இழந்தனர். இதில் லோம்ரோர், 13 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். அவர் இம்பேக்ட் பிளேயராக பேட் செய்திருந்தார். 19.4 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது ஆர்சிபி. இதன் மூலம் லக்னோ அணி வெற்றி பெற்றது.

பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி இருந்தது. லக்னோ வீரர்கள் நிக்கோலஸ் பூரன் மற்றும் தேவ்தத் படிக்கல் களத்தில் துடிப்பாக செயல்பட்டு ஃபீல்டிங் பணியை மேற்கொண்டனர். இருவரும் தலா 1 ரன் அவுட் மற்றும் 3 கேட்ச் பிடித்திருந்தனர். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை மயங்க் யாதவ் வென்றார். 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை அவர் வீழ்த்தி இருந்தார்.

முன்னதாக, இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் லக்னோவின் ஓப்பனர்களாக குயின்டன் டிகாக் - கேஎல் ராகுல் களமிறங்கினர். டிகாக் ஒருபுறம் பந்துகளை பறக்கவிட, கிளென் மேக்ஸ்வெல் வீசிய 6-வது ஓவரில் 20 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி கிளம்பினார் கே.எல்.ராகுல். அவரைத் தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல் 6 ரன்களில் விக்கெட்டானார்.

ஸ்டாயினிஸ் 2 சிக்சர்கள் விளாசினார். ஆனால் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த டிகாக் அணியின் ஸ்கோரை உயர்த்தி நம்பிக்கை கொடுத்தார். 56 பந்துகளில் 81 ரன்களை குவித்திருந்த டிகாக்கை 17-வது ஓவரில் வெளியேற்றினார் ரீஸ் டாப்லி.
அதன்பிறகு களத்துக்கு வந்த ஆயுஷ் பதோனி டக்அவுட். கடைசி கட்டத்தில் சீறிய நிக்கோலஸ் பூரன் 18-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சரை விளாசி மிரட்டினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அவர் தனது 100-வது சிக்சரை எட்டினார்.

19-வது ஓவரில் 2 சிக்சர்ஸுடன் பூரன் அதிரடி காட்ட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு லக்னோ 181 ரன்களைச் சேர்த்தது. பூரன் 40 ரன்களுடனும், கிருணல் பாண்டியா ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.

ஆர்சிபி அணி தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட், சிராஜ், ரீஸ் டாப்லி, யஷ் தயாள் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT