ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் விலகியுள்ளார்.
காமன்வெல்த் போட்டியின்போது அவருடைய இடது கையில் ஏற்பட்ட தசைநார் முறிவு காரணமாக அவர் விலகியுள்ளார். அவருடைய காயம் எப்போது குணமடையும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதனால் அவர் அடுத்த சில மாதங்களுக்கு எவ்வித போட்டியிலும் பங்கேற்கமாட்டார் என தெரிகிறது.
இது தொடர்பாக விஜேந்தர் கூறுகையில், “என்னால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க முடியும் என நினைத்தேன். அதற்கான அணித் தேர்வு முகாமுக்காக பயிற்சியில் ஈடுபட்டேன். ஆனால் எனது கையை தூக்க முடியவில்லை. எனது கையில் உள்ள எலும்புகள் சரியாக பொருந்த நாட்கள் ஆகும். ரத்தமும் கசிகிறது. அதனால் போட்டியிலிருந்து விலகுவது என முடிவெடுத்தேன்” என்றார்.-பிடிஐ