பெங்களூரு: ஐபிஎல் டி20 தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 182 ரன்களைச் சேர்த்துள்ளது.
பெங்களூரு சின்ன சாமி கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டு பிளெஸ்ஸிஸ் 2வது ஓவரிலேயே 8 ரன்களுக்கு அவுட்.
மறுபுறம் விராட் கோலி நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருக்க, 9-வது ஓவர் வரை அவருக்கு துணையாக நின்றார் கேமரூன் கிரீன். ஆந்த்ரே ரஸ்ஸல் வீசிய பந்தில் போல்டு பறக்க கேமரூன் 33 ரன்களில் விக்கெட்டானார். அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் 28 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
3 வீரர்கள் களத்துக்கு வந்து அவுட்டாகி திரும்பிக் கொண்டிருக்க, ஒற்றை ஆளாக நங்கூரமிட்டு அணியின் ஸ்கோரை ஏற்றிக்கொண்டிருந்தார் கோலி. தேவைப்பட்டபோது சிக்சர்களை விளாசினார். இதனால் ஆர்சிபிக்காக அதிக சிக்சர்களை அடித்தவர்கள் பட்டியலில் 240 சிக்சர்கள் விளாசி இந்த மேட்ச் மூலம் முதலிடம் பிடித்தார்.
சோகம் என்னவென்றால் உயிரைக் கொடுத்து கோலி விளையாடிக்கொண்டிருக்க, மறுபுறம் வந்த ரஜத் படிதார், அனுஜ் ராவத் தலா 3 ரன்களில் பெவிலியன் திரும்பினர். ஆனால் அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 3 சிக்சர்களை விளாசி நம்பிக்கையூட்டினார்.
அவரும் கடைசி பந்தில் அவுட்டாக, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 182 ரன்களைச் சேர்த்திருந்தது. விராட் கோலி 59 பந்துகளில் 83 ரன்களை குவித்து களத்தில் இருந்தார்.
கொல்கத்தா அணி தரப்பில் ஆந்த்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சுனில் நரேன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.