புதுடெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஃபீல்டிங் செயல்பாடு குறித்து சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். அதோடு சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனிக்கு வயதாகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியை முதல் இரண்டு போட்டிகளில் வீழ்த்தி உள்ளது. இதில் சென்னை அணி வீரர்களின் கூட்டு முயற்சி அடங்கியுள்ளது. பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ், மிட்செல், துபே போன்றவர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர். பந்து வீச்சில் முஸ்தபிசுர் ரஹ்மான், பதிரானா, தீபக் சஹர் ஆகியோர் பந்து வீச்சிலும் கலக்கி வருகின்றனர். அணியின் ஃபீல்டிங் செயல்பாடும் சிறப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
“போட்டிகளில் வெற்றி பெற எதிரணி வீரர்கள் கொடுக்கும் கேட்ச் வாய்ப்பை பற்றிக் கொள்வது மிகவும் அவசியம். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ரஹானே மற்றும் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக கேட்ச் பிடித்து அசத்தினர். தோனியும் ஒரு கேட்ச் பிடித்திருந்தார். ரஹானேவுக்கு 35 வயதாகிறது. தோனிக்கு 41 வயதாகிறது. அவருக்கு வயதாகிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் அவரது செயல்பாடு ஈர்க்கும் வகையில் இருந்தது” என சேவாக் தெரிவித்துள்ளார். குஜராத் அணியுடனான போட்டி முடிந்த பிறகு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வலது பக்கமாக சுமார் 2 மீட்டர் தூரம் டைவ் அடித்து பந்தை கேட்ச் செய்திருந்தார் தோனி. அது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியில் கவனம் பெற்றிருந்தது.