விளையாட்டு

ஆர்ஆர் அணியின் ரியான் பராக் அதிரடி: டெல்லிக்கு 186 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 185 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்களை சேர்த்து அணிக்கு பக்கபலமாக திகழ்ந்தார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஜாஸ் பட்லர் களமிறங்கினர். முகேஷ் குமார் வீசிய 2வது ஓவரில் ஜெய்ஸ்வால் 5 ரன்களுக்கு போல்டானார்.

அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 15 ரன்களில் கேட்ச் கொடுத்துவிட்டு பெவிலியன் திரும்பினார். 7வது ஓவரில் பட்லர் எல்பிடபிள்யூ முறையில் 11 ரன்களில் அவுட்.10 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த ராஜஸ்தான் 58 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.

ரவிச்சந்திரன் அஸ்வின் - ரியான் பராக் அணியின் ஸ்கோரை உயர்த்த ஓரளவு முயற்சித்தனர். இருவரும் சேர்ந்து விளாசிய 5 சிக்சர்ஸ் ஆறுதல். ஆனால் அந்த ஆறுதல் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அக்சர் படேல் வீசிய பந்தில் அஸ்வின் 29 ரன்களில் விக்கெட்டானார்.

ஒருபுறம் ரியான் பராக் நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருந்தார். மறுபுறம் துருவ் ஜூரல் 20 ரன்களில் போல்டு. அடுத்து வந்த ஷிம்ரன் ஹெட்மயர் துணை நின்றார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் 185 ரன்களைச் சேர்த்தது. இதில் ரியான் பராக் 6 சிக்சர்களை விளாசி 85 ரன்களுடனும், ஹெட்மயர் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

டெல்லி அணி தரப்பில், கலீல் அகமது, முகேஷ்குமார், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT