மிட்செல் ஸ்டார்க் 
விளையாட்டு

ரூ.24.75 கோடி, ஒரே ஓவரில் 4 சிக்சர்... கேகேஆருக்கு ‘வள்ளல்’ ஸ்டார்க் தந்த ஷாக்!

ஆர்.முத்துக்குமார்

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து ஏலம் எக்கப்பட்ட வீரர் என்றால் அது மிட்செல் ஸ்டார்க்தான். ஆனால் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்றிருந்தால் அதற்குக் காரணமானவரும் அவராகவே இருந்திருப்பார். காரணம், முக்கியமான ஓவரில் 4 சிக்சர்களுடன் 26 ரன்கள் விளாசப்பட்டார் ஸ்டார்க்.

உலகக் கோப்பைகள் நீங்கலாக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஸ்டார்க் ஆடிய மொத்த டி20 சர்வதேசப் போட்டிகளின் எண்ணிக்கை வெறும் இரண்டுதான். கடைசியாக டி20 உலகக் கோப்பைக்கு அவர் ஆடலாம் என்று இருந்த நிலையில், ஆஸ்திரேலியா அவரை உட்கார வைத்தது. 2022 உலகக் கோப்பையில் அவர் சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலிய அணியின் அதிக ரன்கள் கொடுத்த பவுலர் யார் என்றால் அது மிட்செல் ஸ்டார்க்தான்.

சர்வதேசப் போட்டி அல்லாமல் வெளியே ஸ்டார்க் ஆடிய டி20 ஆர்சிபிக்கு அவர் 2015-ல் ஆடியதே. அதற்குப் பிறகே ஸ்டார்க்கின் டி20 ஓவர் ரன் விகிதம் 8.14 என்கின்றன கிரிக் இன்போ புள்ளி விவரங்கள். மேலும், இதே காலக்கட்டத்தில் இறுதி ஓவர்களில் அவரது சிக்கன விகிதம் ஓவருக்கு 9.62 ரன்கள் என்கிறது அதே புள்ளி விவரம். இதனால்தான் உலகக் கோப்பை 2022-ல் ஸ்டார்க் ட்ராப் செய்யப்பட்டார்.

2016, 17, 18 ஐபிஎல் தொடர்களில் ஸ்டார்க் விளையாடவில்லை. பின் என்னதான் ஸ்டார்க்கிற்கு இவ்வளவு விலை கொடுக்க வைத்தது என்ற ஐயம் எழலாம். ஏலத்தில் ஈடுபடும் பணமுதலைகளின் ஈகோ ஒரு காரணமாக இருக்கலாம். செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தை இப்படியாக வெளிக் காட்டும் ஈகோ உடையவர்கள்தான். ஐபிஎல் ஏலம் போன்றவை இத்தகைய பொது மீறிய தனி இயல்புகளைக் கொண்டதே. ஆகவே, ஸ்டார்க்கின் திறமையை நம்பி ஏலம் எடுத்தார்கள் என்றும் கூறுவதற்கில்லைதான்.

ஓர் உண்மையான வேகப்பந்து வீச்சாளர், ஜென்யூன் பேஸ் என்று சொல்வார்களே அத்தகைய பவுலர்கள் தேவை என்று அணி உரிமையாளர்கள் கருதவும் இடமுண்டு. ஆனால் இந்தியப் பிட்ச்களில், ஒன்று மட்டை பிட்ச், இல்லையேல் ஸ்பின் பிட்ச், அதுவும் இல்லையெனில் ரெண்டுங் கெட்டானாக பந்துகள் மட்டைக்கே வராமல் படுத்தும் ஸ்லோ பிட்ச்கள். இதில் ஸ்டார்க்குக்கு எல்லாம் என்ன வேலை? யார்க்கர்களை ஸ்டார்க் வீச ஆரம்பித்தால் 145 கிமீ வேக யார்க்கர்கள் நிச்சயம் கேகேஆருக்கு சில பல வெற்றிகளைப் பெற்றுத்தர வாய்ப்புள்ளது என்பதோடு ஸ்டார்க்க்கு கொடுத்த விலையும் நியாயமாகலாம்.

ஸ்டார்க் தனக்கு கொடுத்த விலைக்காக நிரூபிக்க வேண்டியுள்ளது. டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் மேட்ச் வின்னர், டி20-யில் மேட்ச் லூசர் ஆக இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால், நேற்று கொல்கத்தா அணிக்கு அவரது அந்த 26 ரன் ஓவர் பெரிய தோல்வியைத் தழுவச் செய்திருக்கும். அடுத்த மேட்ச் மிட்செல் ஸ்டார்க் இருப்பதே கடினம் என்ற அளவுக்கு அவரைப் போட்டு சாத்தி எடுத்து விட்டனர்.

ஸ்டார்க்கின் ஒட்டுமொத்த டி20 சிக்கன விகிதம் 7.67 என்று உள்ளது. கடைசியாக ஸ்டார்க் மே.இ.தீவுகளுக்காக 4 ஓவர்களில் 20 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதன் பிறகு அயர்லாந்துக்கு எதிராக உலகக் கோப்பை டி20 போட்டியில் 137 ரன்களுக்கு அயர்லாந்து சுருண்ட போது கூட ஸ்டார்க் 4 ஓவர்களில் 43 ரன்களை விட்டுக் கொடுத்ததுதான் நடந்தது.

மிட்செல் ஸ்டார்க் தேவையில்லாத ஆணியாக கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும் முன்னர் தனது ஆக்ரோஷத்தை அவர் மீட்டெடுக்க வேண்டும். இல்லையெனில் நிச்சயம் அவரை ரசிகர்கள் ட்ரோல் செய்வார்கள் என்பது உறுதி.

SCROLL FOR NEXT