கேகேஆர் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 
விளையாட்டு

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று மோதல்: வெற்றியுடன் தொடங்குமா கொல்கத்தா நைட் ரைடர்ஸ்?

செய்திப்பிரிவு

கொல்கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

இரு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் களமிறங்குகிறது. முதுகுவலி காயம் காரணமாக கடந்த சீசனில் களமிறங்காத ஸ்ரேயஸ் ஐயர், சமீபகாலமாக சிறந்த பார்மில் இல்லை. எனினும் கடைசியாக ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 95 ரன்கள் சேர்த்தது அவரது நம்பிக்கையை அதிகரிக்கக்கூடும். எனினும் உடற்தகுதி காரணமாக அவர், ஐபிஎல் சீசன்முழுவதும் விளையாடுவாரா என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதுஒருபுறம் இருக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த கவுதம்கம்பீர் இம்முறை மீண்டும் கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக திரும்பி உள்ளார். அவரது ஆலோசனைகள் கொல்கத்தா அணிக்கு பயனளிக்கக்கூடும். கம்பீர் தலைமையில் கொல்கத்தா அணிக்கு 2011 முதல் 2017 வரையிலான காலக்கட்டம் பொற்காலமாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில் கொல்கத்தா அணி இரு முறை பட்டம் வென்றிருந்தது.

இதுஒருபுறம் இருக்க இந்த சீசனில் ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. பவர் பிளேவிலும், இறுதிக்கட்ட ஓவர்களிலும் அனுபவம் வாய்ந்தமிட்செல் ஸ்டார்க் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் மற்றொரு அனுபவ வீரரான ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்ஸலும் பந்து வீச்சில் பலம் சேர்க்கக்கூடும்.

பேட்டிங்கை பொறுத்தவரையில் ரஹ்மனுல்லா குர்பாஸ், பில் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் டாப் ஆர்டர் மற்றும் நடுவரிசையில் பலம் சேர்க்க்கூடும். இறுதிக்கட்ட ஓவர்களில் ஆந்த்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங்கு மிரட்ட ஆயத்தமாக இருக்கின்றனர். சுழற்பந்து வீச்சில் சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் சர்மா பலம் சேர்க்கக்கூடும்.

2016-ம் ஆண்டு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது இம்முறை புதிய கேப்டனான பாட்கம்மின்ஸ் தலைமையில்களமிறங்குகிறது. கம்மின்ஸ்இந்த சீசனுக்காக ரூ.20.50 கோடிக்குஏலம் எடுக்கப்பட்டிருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட், ஒருநாள் வடிவில்உலக சாம்பியன் பட்டங்களை வென்றுகொடுத்த பாட் கம்மின்ஸ் தனதுவெற்றி பயணத்தை தொழில் முறை போட்டியிலும் தொடரச் செய்வதில் முனைப்பு காட்டக்கூடும்.

கடந்த 3 சீசன்களிலும் ஹைதராபாத் அணி லீக் சுற்றில் படுதோல்விகளை சந்தித்து கடைசி இரு இடங்களுடனே தொடரை நிறைவு செய்திருந்தது. இந்த நிலையை இம்முறை மாற்றியமைப்பதில் ஹைதராபாத் அணி தீவிர கவனம் செலுத்தக்கூடும்.

ஹைதராபாத் அணியின் பேட்டிங் வரிசையில் டிராவிஸ் ஹெட், ஹெய்ன்ரிச் கிளாசன், எய்டன் மார்க்ரம், அப்துல்சமத், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி,கிளென் பிலிப்ஸ் ஆகியோர் வலுவானவர்களாக திகழ்கின்றனர். பந்து வீச்சில் பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், மார்கோ யான்சன், நடராஜன், உனத்கட், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும்.

SCROLL FOR NEXT