விளையாட்டு

ஐபிஎல் போல கனடாவில் கிரிக்கெட் லீக்: தொழிலதிபர் முயற்சி

ஐஏஎன்எஸ்

இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், கனடா நாட்டில் ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட் லீக் போட்டியை நடத்த தொழிலதிபர் ஒருவர் திட்டமிட்டுள்ளார்.

ராய் சிங் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் இம்முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறார். கனடிய ப்ரீமியர் லீகை தொடங்குவதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார். இதற்காக கனடியன் ப்ரீமியர் லீக் டி20-ஐ தொடங்கியுள்ளார். இதற்கான சோதனை ஆட்டத்தை ஏற்கெனவே மாண்ட்ரியலில் நடத்தியும் காட்டியிருக்கிறார்.

"நான் இந்தியன் ப்ரீமியர் லீக்கின் பிரம்மாண்ட வெற்றியை பார்த்திருக்கிறேன். அதே போன்று கனடா மற்றும் அமெரிக்காவிலும் நடத்தலாம். இங்கு ஒரே பிரச்சினை கிரிக்கெட்டுக்கான கட்டமைப்பு வசதிகள் தான். இதற்காக 153 ஏக்கர் பரப்பளவில் உள் விளையாட்டு அரங்கம் ஒன்றை வாங்கப்போகிறேன். நயாகரா நீர்வீழ்ச்சி இருக்குமிடத்திலிருந்து 8 நிமிட தொலைவில் அது அமைந்துள்ளது.
 

roy singhjpgராய் சிங்right

கனடியன் ப்ரீமியர் லீகில் ஒவ்வொரு சீசனிலும் 27 ஆட்டங்கள் நடக்கும். 10 அணிகள் இரண்டு பிரிவுகளில் ஆடுவார்கள்.

"கிரிக்கெட்டை விரும்பும் தொழிலதிபராக, டி20 கிரிக்கெட் மூலம் பெரிய வியாபார வாய்ப்புகள் வரும் என நான் நம்புகிறேன். ஆனால் இதில் நிறைய செலவு இருக்கிறது. ரசிகர்கள் வர பெரிய அரங்கம் தேவை. அடுத்து தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்ய வேண்டும். ஒளிபரப்பு செய்பவர்களுக்கு வட அமெரிக்காவிலிருந்து மட்டுமே கிட்டத்தட்ட 27 மில்லியன் பார்வையாளர்கள் கிடைப்பார்கள். இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஒளிபரப்பு உரிமையை விற்போம்.

எனக்கு விவ் ரிச்சர்ட்ஸ், ரிச்சி ரிச்சர்ட்ஸன், க்ளைவ் லாய்ட், தினேஷ் ராம்தின், டுவைன் பிராவோ உள்ளிட்டவர்கள் நல்ல பரிச்சயம். மேற்கிந்தியத் தீவுகள் அணியிலிருந்து நட்சத்திர வீரர்களை வரவழைத்து கனடியன் ப்ரீமியர் லீகை விளம்பரப்படுத்தும் திட்டமும் உள்ளது" என்று கூறுகிறார் ராய் சிங்.

கனடாவும் கிரிக்கெட்டும்

சுவாரசியம் என்னவென்றால், 1844ஆம் ஆண்டில் முதல் டெஸ்ட் மேட்ச்சை விளையாடிய நாடு கனடாதான். அமெரிக்கா - கனடா அணிகளுக்கு இடையே 3 நாள் டெஸ்ட் மேட்சாக செப்டம்பர் 25 முதல் 27 வரை நடைபெற்ற போட்டியில் கனடா 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டி நியூயார்க் நகரில் நடந்தது.

ஆனால் கிரிக்கெட் ஆவணங்களில் முதல் டெஸ்ட் மேட்ச் 1877ஆம் ஆண்டு, மெல்போர்னில், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 150 வருடங்களுக்கு முன் கனடாவின் அதிகாரப்பூர்வ விளையாட்டாக கிரிக்கெட் இருந்துள்ளது. பின் என்.ஹெச்.எல் எனப்படுகிற தேசிய ஐஸ் ஹாக்கி லீக் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. 1892ஆம் ஆண்டில் கனடிய கிரிக்கெட் சங்கமும் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

cropped-CC-Logo13jpg

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளைச் சேர்ந்த பல கிரிக்கெட் வீரர்கள் கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ளதால், தற்போது மீண்டும் கிரிக்கெட்டுக்கான மவுசு அங்கு அதிகரித்துள்ளது.

மே மாதம் 2008-ல் கனடாவின் முதல் டி20 லீக் தேசிய அளவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதே வருடம், கனடா அரசாங்கமும், கிரிக்கெட்டை தேசிய விளையாட்டுகளில் ஒன்றாக அங்கீகரித்து அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தது.

1979, 2003, 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் கனடா கிரிக்கெட் அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றிருந்தது. ஆனால் தகுதிச் சுற்றில் தோல்வியடைந்ததால் 2015 உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாமல் போனது.

SCROLL FOR NEXT