மும்பை: நாளை 17-வது ஐபிஎல் சீசன் தொடங்க உள்ளது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்நாள் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா என இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். இது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் பரவலாக கவனம் பெற்றுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற இரண்டு அணிகளில் ஒன்றாக உள்ளது மும்பை இந்தியன்ஸ். அந்த ஐந்து முறையும் அணியை கேப்டனாக வழிநடத்தியவர் ரோகித்தான். நடப்பு ஐபிஎல் சீசனில் அந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட உள்ளார். கடந்த இரண்டு சீசன்களாக அவர் வழிநடத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி ஒருமுறை சாம்பியன் பட்டமும், மற்றொரு முறை இரண்டாம் இடமும் பிடித்து தொடரை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி பெரிய விலை கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் போது காயம் காரணமாக ஹர்திக் விளையாடி இருந்தார். அதன் பிறகு அண்மையில் தான் அவர் தொழில்முறை கிரிக்கெட் விளையாட களத்துக்கு திரும்பினார். அவர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி எப்படி செயல்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, தற்போது அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணி கேம்பில் சந்தித்துக் கொண்ட போது பரஸ்பரம் கட்டி அணைத்து, அன்பு பாராட்டினார். இந்த காட்சிகள் ரோகித் மற்றும் ஹர்திக் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தனது கேப்டன்சியின் கீழ் விளையாடுவது ரோகித் சர்மாவுக்கு சங்கடமாக இருக்காது என்றும். அது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்றும் ஹர்திக் பாண்டியா தெரிவித்திருந்தார். கேப்டன்சி மாற்றம் குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் வசம் கேட்டபோது, அவர் அமைதி காத்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அணிகள் கேப்டன்களை தடாலடியாக திடீரென மாற்றுவது வழக்கத்தில் உள்ளதொரு நகர்வு தான். இதற்கு முன்பாகவும் பல்வேறு அணிகள் இதனை கடைபிடித்துள்ளன.