விளையாட்டு

சர்வதேச வெற்றிகளை சன்ரைசர்ஸ் வெற்றியாக மாற்றுவாரா புதிய கேப்டன் கம்மின்ஸ்?

ஆர்.முத்துக்குமார்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் 2024-ல் பாட் கம்மின்ஸ் தலைமையில் வலுவான அணியைக் கொண்டுள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை ஒருநாள் சாம்பியன்ஷிப் என்று கம்மின்ஸ் தலைக்கு மேல் ஒளிவட்டம் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் தங்கள் அணி நிச்சயம் பிளே ஆஃப் சுற்று வரைக்குமாவது வர வேண்டும் என்ற நிர்பந்தத்தை பாட் கம்மின்ஸிடம் தெரிவித்திருப்பார்கள். ஏனெனில் கடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அடிமட்ட நிலைக்குச் சரிந்ததே காரணம். வெறும் 8 புள்ளிகள் மட்டுமே அப்போது எடுத்திருந்தனர்.

இந்த முறை அணியைப் பார்த்தால் காகிதப் புலி போல் தெரிகிறது.

அணியின் விவரம்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), எய்டன் மார்க்ரம், மயங்க் அகர்வால், ட்ராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசன், அன்மோல்ப்ரீத் சிங், அப்துல் சமத், ராகுல் திரிபாதி, உபேந்திர யாதவ், அபிஷேக் சர்மா, கிளென் பிலிப்ஸ், வனிந்து ஹசரங்கா, மார்க்கோ யான்சென், ஷெபாஸ் அகமது, வாஷிங்டன் சுந்தர், சன்வீர் சிங், நிதிஷ் குமார் ரெட்டி, ஆகாஷ் சிங், ஃபஸலுல்லா ஃபரூக்கி, புவனேஷ்வர் குமார், மயங்க் மார்க்கன்டே, டி.நடராஜன், ஜாதவேத் சுப்பிரமணியன், உம்ரான் மாலிக், ஜெயதேவ் உனாத்கட்.

மொத்தம் 25 வீரர்கள் கைவசம் உள்ளனர். இதில் பெரிய சிக்கல் என்னவெனில் பாட் கம்மின்ஸ் என்ற அயல்நாட்டு வீரரை கேப்டனாக நியமித்ததால் இன்னும் 3 வெளிநாட்டு வீரர்களையே லெவனில் எடுக்க முடியும். வெளிநாட்டு வீரர்களில் முழுவதும் அதிரடி வீரர்களாக உள்ளனர். எய்டன் மார்க்ரம், ட்ராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசன், கிளென் பிலிப்ஸ் என்று அதிரடிப்படையினர் இருக்கின்றனர். இதில் யாரை எடுப்பது யாரை விடுவது. 3 வீரர்கள்தான் அயல்நாட்டு வீரர்களை சேர்க்க முடியும். இது ஒரு பிரச்சனை. ஆனால் அனைவரும் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார்கள் என்பதுதான் இந்த அணியின் ஆறுதல்.

கடந்த 4 தொடர்களாகவே சன்ரைசர்ஸ் அணி சரியாக ஆடவில்லை. அதனால் கேப்டனை மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தர், ஷெபாஸ் அகமது இருக்கும் போது வனிந்து ஹசரங்கா ஏன் ஏலம் எடுக்கப்பட்டார் என்றால் இவர் ஒரு ஆல்ரவுண்டர். ஆனால் இப்போது இம்பேக்ட் பிளேயர் என்ற ஒன்று வந்ததன் மூலம் ஆல்ரவுண்டர்களுக்கு வேலையில்லை என்பது போல் ஆகிவிட்டது.

வெளிநாட்டு வீரர்களைப் பொறுத்தவரையில் சன்ரைசர்ஸ் வலுவாக உள்ளது. அதேபோல் ஸ்பின் துறையில் நல்ல இந்திய ஸ்பின்னர்கள் அவர்களிடம் இல்லை. வாஷிங் டன் சுந்தர் உண்மையில் பவர் ப்ளேயில் வீசி முடித்து விடுகிறார். மயங்க் மார்க்கண்டே நல்ல தெரிவு. அவர் கடந்த சீசனில் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பேட்டிங்கில் இந்திய பேட்டர்கள் இந்த அணியில் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, அப்துல் சமத் கடந்த சீசனில் இவர்கள் யாரும் 300 ரன்களைத் தாண்டவில்லை. எடுத்த எடுப்பிலேயே கடினமான அணிகளை சன்ரைசர்ஸ் சந்திக்கின்றது.

முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அடுத்து மும்பை இந்தியன்ஸ், அடுத்து குஜராத் டைட்டன்ஸ், பிறகு சிஎஸ்கேவை சந்திக்கவுள்ளது. கம்மின்ஸுக்கு ஏகப்பட்ட தலைவலி காத்திருக்கிறது. ஃபார்ம் அவுட் இந்திய வீரர்களை வைத்துக் கொண்டு கமின்ஸ் அயல்நாட்டு அதிரடி வீரர்களைக் கலந்துகட்டி ஒரு அணியைத் தயார் செய்ய வேண்டும். மிகவும் கடினம்.

SCROLL FOR NEXT