புதுடெல்லி: மகளிருக்கான பிரீமியர் லீக் டி20 தொடரில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) சாம்பியன் பட்டம் வென்றது.
டெல்லி கேடபில்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 114 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் வெற்றியில் ஸ்ரேயங்கா பாட்டீல், சோபி மோலினக்ஸ் ஆகியோரது பந்து வீச்சும் ஸ்மிருதி மந்தனா, சோபி டிவைன், எலிஸ் பெர்ரி ஆகியோரது நிதானமான மட்டை வீச்சும் முக்கிய பங்கு வகித்தன.
ஐபிஎல் தொடரில் எப்போதுமே ஆர்சிபி அணி ‘இம்முறை கோப்பை நமதே’ என்ற வாசகத்தை முன்வைக்கும். இருப்பினும் அந்த அணி 16 சீசன்களை கடந்த போதிலும் கோப்பையை வென்றது இல்லை. இந்த சூழ்நிலையில் மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. இறுதிப்போட்டிக்கு பின்னர் ஸ்மிருதி மந்தனா கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு ஏற்பட்ட தோல்விகள் ஒரு வீராங்கனையாக, ஒரு கேப்டனாக மற்றும் ஒரு அணியாக எங்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தது. நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் உங்களை நீங்களே நம்புவதுதான்.
தற்போது கிடைத்துள்ள வெற்றியின் மகிழ்ச்சியில் இருந்து மீண்டு வர ஒரு சிறிது காலம் ஆகும். நான் மட்டும் கோப்பையை வெல்லவில்லை, ஒட்டுமொத்த அணியும் வென்றுள்ளது. ஒருஅணியாக ஆர்சிபி வெற்றி பெறுவது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.