இந்திய அணியின் இயக்குனராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டதையடுத்து பயிற்சியாளர் டன்கன் பிளெட்சர் விலக முடிவெடுத்தால் அவரை பிசிசிஐ கட்டுப்படுத்தாது என்று கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெயர் கூற விரும்பாத பிசிசிஐ அதிகாரி செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறும்போது, “டன்கன் பிளெட்சருக்கு அதிகாரம் எதுவும் மீதமில்லை. ரவி சாஸ்திரியே முடிவெடுப்பார், இது பிளெட்சருக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும். இந்தத் தருணத்தில் உதவிப்பணியாளர்கள் தெரிவு அவருக்கு இல்லாத நிலையில் அவரின் பங்கு குறைவுதான். அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடைபெறும் உள்நாட்டுத் தொடருக்கு முன்பாக அவர் விலக முடிவெடுத்தால் கிரிக்கெட் வாரியம் அவரைத் தடுக்கப்போவதில்லை” என்று கூறியுள்ளார்.
பிளெட்சர் விலகுவதாக சூசகமாகத் தெரிவித்தாரா என்று கேட்டதற்கு அவர், “அது போன்ற சில விஷயங்களை பிசிசிஐ அவருக்கு உணர்த்தியுள்ளது” என்றார்.
மேலும், “ரவி சாஸ்திரியும் தோனியும் உத்திகளை வகுப்பார்கள், சஞ்சய் பாங்கரின் திறமைகள் நிரூபிக்கப்பட்ட ஒன்று. இப்போது உள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பாரத் அருணிடம் பயிற்சி பெற்றவர்கள். ஆகவே டன்கன் பிளெட்சர் என்ன செய்து விடப்போகிறார். இதனை அவர் சூசகமாகப் புரிந்து கொண்டாரேயானால் அவர் ராஜினாமா செய்யலாம். அது ஏற்கப்படும்.
புதிய அணி இயக்குனரும், புதிய உதவிப் பயிற்சியாளர்களும் ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக இந்திய வீரர்களின் திறமைகளை அறுதியிட முடியும்” என்று அவர் கூறியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.