விளையாட்டு

“ஜெய் ஷா சொன்னதால்தான்...” - மனம் திறக்கும் ரிஷப் பந்த்

ஆர்.முத்துக்குமார்

புதுடெல்லி: எனக்கு ஏற்பட்ட விபத்து, அதன் பிறகான அறுவை சிகிச்சை, மறுவாழ்வு, பயிற்சி இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது மீண்டும் ஆடவிருக்கிறேன் என்பதே ஓர் அதிசய நிகழ்வாகவே எனக்குத் தெரிகிறது என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கிக் காயமடைந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஐபிஎல் 2024 தொடரில் ஆடவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்த், மீண்டும் முதல் போட்டியில் அறிமுகமாவது போல் பதற்றமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 14 மாதங்களுக்குப் பிறகு போட்டித்தரமான கிரிக்கெட்டுக்குள் வரும் ரிஷப் பந்த் கூறும்போது, “முதலில் ஐசிசி உலகக் கோப்பையில் விளையாட விரும்பி கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டேன். ஆனால் முடியாமல் போய் விட்டது. சரி போகட்டும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட வேண்டும் என்று கருதி பயிற்சிகளில் ஈடுபட்டேன். அப்போது ஜெய் ஷாவும் பிசிசிஐ-யில் உள்ள நிர்வாகிகளும் உடல் ஆரோக்கிய விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம், பொறுமையாகவே வாருங்கள் என்றார்கள்.

ஜெய் ஷா போன்றவர்கள் இப்படிக் கூறும்போது அது நமக்கு பெரிய தெம்பை அளிக்கிறது. நான் பெங்களூருவில் ஹோட்டலில் தங்க விரும்பவில்லை, தனி வீடு எடுத்துத் தங்க வேண்டும் என்று நினைத்தேன் அதற்கும் பிசிசிஐ உதவியது. ஐபிஎல் ஆடுவது குறித்து நான் உற்சாகமாகவும் இருக்கிறேன் பதற்றமாகவும் இருக்கிறேன். ஏதோ என் முதல் அறிமுகப் போட்டியில் ஆடுவது போல் உணர்கிறேன். மீண்டும் நான் கிரிக்கெட் ஆடுவது என்பதே பேரதிசிய நிகழ்வுதான்.

என்னை ஊக்குவிப்பவர்கள் ரசிகர்கள் என்று அனைவருக்கும் நன்றி. தேசிய கிரிக்கெட் அகாடமிக்கும் நன்றிகள். இவர்களது அன்பும் அரவணைப்பும் எனக்கு பெரிய பலத்தை அளிக்கிறது. ஐபிஎல் தொடருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் திரும்புவது உற்சாகமளிக்கிறது.

டி20 உலக கோப்பையில் இடம் பெறுவேனா இல்லையா என்பது குறித்து தேர்வர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். என்னுடைய இலக்கெல்லாம் நான் களத்தில் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்பது மட்டும்தான்” என்று ரிஷப் பந்த் தெரிவித்தார்.

பெரிய விபத்திலிருந்து உயிர்பிழைத்து மீண்டும் வரும்போது ரிஷப் பந்த் இன்னும் மனதளவில் அதிக திடமாகியிருப்பார் என்றே தெரிகிறது. மீண்டும் இந்திய அணிக்கு வந்து அவர் இதுவரை ஆடிய வெற்றிகர இன்னிங்ஸ்களைத் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களில் விருப்பமாக உள்ளது.

SCROLL FOR NEXT