விளையாட்டு

ரிஷப் பந்த் உடற்தகுதியை எட்டிவிட்டார்; வங்கதேச தொடரில் ஷமி விளையாடக் கூடும் - ஜெய்ஷா தகவல்

செய்திப்பிரிவு

தரம்சாலா: கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வரும் செப்டம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற உள்ள தொடரில் விளையாடக்கூடும் என பிசிசிஐ செயலாளார் ஜெய்ஷா கூறியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது கணுக்காலில் காயம் அடைந்த முகமது ஷமி கடந்த மாதம் இறுதியில் லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் காரணமாக அவர், சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. மேலும் வரும் 22-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் ஷமி கலந்துகொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையையும் ஷமி தவறவிடுகிறார். இந்நிலையில் தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியதாவது:

ஷமிக்கு அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது, அவர் இந்தியா திரும்பியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிராக வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள உள்நாட்டுத் தொடரில் முகமது ஷமி, இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. கே.எல்.ராகுலுக்கு தொடை பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு ஊசி செலுத்த வேண்டியது இருந்தது. இதை எடுத்துக் கொண்டுள்ள அவர், தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ரிஷப் பந்த்: காயங்களில் இருந்து மீண்டுள்ள ரிஷப் பந்த் நன்றாக பேட்டிங் செய்கிறார். விக்கெட் கீப்பிங்கும் நன்றாக செய்கிறார். அவர், உடற்தகுதியை அடைந்துவிட்டார் என விரைவில் அறிவிப்போம். ரிஷப் பந்த் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடினால் பெரிய விஷயமாக இருக்கும். அவர், இந்திய அணியின் சொத்து. பார்மை அவரால் தக்க வைக்க முடிந்தால் உலகக் கோப்பை தொடரில் விளையாடலாம். ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் எவ்வாறு செயல்படுகிறார் என பார்ப்போம். இவ்வாறு ஜெய் ஷா கூறினார்.

SCROLL FOR NEXT