விளையாட்டு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் விதர்பா அணி

செய்திப்பிரிவு

நாக்பூர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேச அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது விதர்பா அணி.

நாக்பூரில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் விதர்பா 170 ரன்களும், மத்திய பிரதேசம் 252 ரன்களும் எடுத்தன. 82 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய விதர்பா 101.3 ஓவர்களில் 402 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 141, அக் ஷய் வாட்கர் 77 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து 321 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மத்திய பிரதேச அணியானது 4-வது நாள் ஆட்டத்தில் 71 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 228ரன்கள் எடுத்தது.

நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய மத்திய பிரதேச அணி 81.3 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சர்னாஷ் ஜெயின் 25, குமார் கார்த்திகேயா 0, அனுபவ் அகர்வால் 0, குல்வந்த் கெஜ்ரோலியா 11 ரன்களில் நடையை கட்டினர். விதர்பா அணி தரப்பில் யாஷ்தாக்குர், அக் ஷய் வகரே ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விதர்பா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டியில் விதர்பா, மும்பையுடன் மோதுகிறது. விதர்பா இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது 3-வது முறையாகும். கடந்த 2017-2018 மற்றும் 2018-2019 சீசன்களில் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

SCROLL FOR NEXT