விளையாட்டு

ஆஸ்திரேலியாவிலும் 4-0 தோல்வி: கிளென் மெக்ரா கணிப்பு

செய்திப்பிரிவு

தற்போது இந்திய கிரிக்கெட் அணி இருக்கும் நிலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 0-4 என்ற படுதோல்வியைச் சந்திக்கும் போல் தெரிகிறது என்று கிளென் மெக்ரா கணித்துள்ளார்.

தனது இந்தக் கூற்றை பொய்யாக்க இந்திய அணி ஏகப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம் என்கிறார் மெக்ரா. எம்.ஆர்.எஃப். வேகப்பந்து அகாடமியின் இயக்குனராக இருக்கும் மெக்ரா, இந்திய வேகப்பந்து வீச்சு குறித்து தனது பார்வையை முன்வைத்துள்ளார்.

ஈ.எஸ்.பி.என்.-கிரிக் இன்ஃபோவிற்க் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக ஆஷஸ் தொடரில் ஆடி 5-0 என்று வென்ற அதே தீவிரத்துடன் ஆடினால் இந்திய அணியின் பாடு திண்டாட்டம்தான். இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆஸ்திரேலியா 4-0 என்று வெல்லும் என்றே நான் கூறுகிறேன். ஆனால் எனது இந்தக் கணிப்பை இந்தியா அணி பொய்யாக்க வேண்டுமென்றால் நிறைய இடங்களில் அதன் ஆட்டம் முன்னேற்றம் அடைய வேண்டும், வேறு வழியில்லை.

இந்திய அணி குறிப்பாக ஃபீல்டிங், கேட்சிங் மற்றும் பேட்டிங்கில் அபரிமிதமாக முன்னேற்றம் கண்டால் மட்டுமே ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள முடியும். பவுலிங்கில் ஓரளவுக்கு முன்னேற்றம் தேவை.

வருண் ஆரோன் வேகமாக வீசுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இஷாந்த் சர்மா எப்போதும் நம்பிக்கை ஊட்டுகிறார். ஆனால் அவருக்கு காயங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி வருவதால் வேகம் குறைந்து விட்டது. ஆனாலும் விக்கெட்டுகளை இன்னமும் எடுத்து வருகிறார் இது முக்கியம்.

பங்கஜ் சிங் மிகவும் புதிதாக உள்ளார். நல்ல வேகம் ஸ்விங் இருக்கிறது. அவரிடம் பெரிய அளவில் வீசுவதற்கான திறமைகள் உள்ளன. இவர்கள் ஒரு அணியாகச் செயல்படுவது அவசியம். இவர்கள் சில வாய்ப்புகளை உருவாக்கித் தந்தார்கள். ஆனால் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் 3 அல்லது 4 கேட்ச்களை தவற விட்டுக் கொண்டிருந்தால் கடினம்தான். இவ்வாறு கேட்ச்களைக் கோட்டை விட்டால் வெற்றி பெறுவதே அபூர்வமாகி விடும். இந்திய பந்து வீச்சுக்கு எனது மார்க் 10க்கு 7 அல்லது 7.5.

புவனேஷ் குமார் ஸ்விங் செய்கிறார். அனைத்திற்கும் மேலாக விக்கெட்டுகளைக் கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டுகிறார். அதனால் சரியான இடங்களில் அவர் பந்தை இறக்குகிறார். எனவே இந்தத் தொடரில் பெற்ற தன்னம்பிக்கையுடன் மேலும் கற்றுக் கொண்டு முன்னேற்றம் காண்பது அவசியம்.

இந்தியாவிடம் உள்ள மிகப்பெரிய குறைபாடு, எக்ஸ்பிரஸ் வேகப்பந்து வீச்சாளர் அவர்களிடம் இல்லாததே. அதனால்தான் அயல்நாட்டுப் பிட்ச்களில் அந்த அணி பிரச்சினையில் சிக்குகிறது. மீடியம் பேஸ் பவுலர்கள் ஸ்விங் செய்கின்றனர். ஆனால் அதற்கு வலுவான பீல்டிங் செட்-அப் செய்து நெருக்கடி கொடுப்பது அவசியம்.

எம்.ஆர்.எஃப். வேகப்பந்து அகாடமியில் வருண் ஆரோனுக்கு நான் பயிற்சி அளித்தேன். அவரது அணுகுமுறை சிறப்பாக உள்ளது. மணிக்கு 145-150 கிமீ வேகத்தில் அவர் வீச வேண்டும், வேகத்தை அவர் இழக்கக்கூடாது.

இவ்வாறு அந்த பேட்டியில் கூறியுள்ளார் மெக்ரா.

SCROLL FOR NEXT