முடிந்தவரை கடினமாக உழைத்து அணிக்கு சிறந்த பங்களிப்பை தரவேண்டும் என்ற மனநிலையில் தான் நான் இருக்க விரும்புகிறேன் என விராட் கோலி கூறியிருக்கிறார்.
நடந்த முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், 3 சதங்களுடன் 558 ரன்களை குவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி.
ஆனால் தான் யாருடனும் போட்டி போட விரும்பவில்லை என்றும், சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்ற பட்டம் எதையும் நாடவில்லை என்றும் கூறியுள்ளார். தான் எப்போதும் தலைப்புச் செய்தியில் இடம் பெற வேண்டும் என்று விரும்பியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்டம் முடிந்த பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது:
"இந்த நிலையில் நான் யாருடனும் போட்டிபோட விரும்பவில்லை. ஒவ்வோர் ஆட்டத்துக்கு முன்பும் நான் எப்படித் தயாராகிறேன், எனது நெறிமுறைகள் என்ன, அந்த குறிப்பிட்ட நாளில் நான் எப்படி உணர்கிறேன் என்பதே முக்கியம். நல்ல மனநிலையில் இருக்கவேண்டும் என்பதே எனது நோக்கமாக இருக்கும்.
யாரையாவது முந்தவேண்டும் என்ற எண்ண ஓட்டத்தில் இருந்தால் அது ஆட்டம் ஆடும்போதே தெரிந்துவிடும். அணிக்கான பங்கையும் நீங்கள் விட்டுத்தருகிறீர்கள் என்று அர்த்தம்.
எனக்கு எந்த பட்டமும் தேவையில்லை. எந்த தலைப்புசெய்தியிலும் இடம்பெறத் தேவையில்லை. களத்தில் சென்று என் வேலையை செய்கிறேன். எழுதுபவர்கள் எழுதுவது அவர்கள் விருப்பம். எந்த பட்டம் வைத்தும் என்னை அழைக்க வேண்டாம். இது எனது வேலை. என் கடமையை நான் செய்ய வேண்டும். நான் யாருக்கும் தயவு காட்டவில்லை. முடிந்தவரை கடினமாக உழைத்து அணிக்கு சிறந்த பங்களிப்பை தரவேண்டும் என்ற மனநிலையில் தான் நான் இருக்க விரும்புகிறேன்.
அணி நிர்வாகம் என்னைப் பற்றி என்ன நினைக்கிறது என்பதுதான் முக்கியம். அணி வீரர்களைப் பற்றி நான் நினைப்பதும், அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதும்தான் எனக்கு முக்கியம். நாளுக்கு நாள் தலைப்புச் செய்திகள் மாறும். நாளையே தவறான ஷாட் ஆடி டக் அவுட் ஆனால் எழுத நினைப்பவர்கள் என்ன வேண்டுமோ அதை வசதியாக எழுதிவிடுவார்கள்.
நான் தவறு செய்தால் இங்கு வந்து அதை ஒப்புக் கொள்வேன். நான் சாக்கு சொல்பவனல்ல. அதேநேரத்தில் இங்கு வந்து என்னைப் பற்றியே நான் பெருமை பேச மாட்டேன். அதை என்னால் செய்யவும் முடியாது ஏனென்றால், முன்பே கூறியது போல, நான் யாருக்கும் உபகாரம் செய்யவில்லை. இது என் வேலை"
இவ்வாறு அவர் கூறினார்.