மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை-பரோடா அணிகள் இடையிலான கால் இறுதி ஆட்டம் மும்பையில் உள்ள பிகேசி மைதானத்தில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 140.4 ஓவர்களில் 384 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதேவேளையில் பரோடா தனது முதல் இன்னிங்ஸில் 110.3 ஓவர்களில் 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
36 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிபில் 102 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 379 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான ஹர்திக் தாமோர் 114 ரன்களும், பிரித்வி ஷா 87, ஷம்ஸ் முலானி 54 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான தனுஷ் கோட்டியன் 32, வேகப்பந்து வீச்சாளரான துஷார் தேஷ்பாண்டே 23 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று கடைசி நாள் ஆட்டத்தை மும்பை அணி தொடர்ந்து விளையாடியது. தனுஷ் கோட்டியனும், துஷார் தேஷ்பாண்டேவும் பரோடா அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். தனுஷ் கோட்டியன் 115 பந்துகளில், 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடனும், துஷார் தேஷ்பாண்டே 112 பந்துகளில், 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடனும் சதம் விளாசினர். இவர்கள் இருவருக்குமே முதல்தர கிரிக்கெட்டில் இது முதல் சதமாக அமைந்தது. அதேவேளையில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 10 மற்றும் 11-வது வீரர்களாக களமிறங்கி சதம் விளாசிய முதல் ஜோடி என்ற வரலாற்று சாதனையையும் படைத்தனர்.
துஷார் தேஷ்பாண்டே 129 பந்துகளில், 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 123 ரன்கள் விளாசிய நிலையில் ரத்வா பந்தில் ஆட்டமிழந்தார். முடிவில் மும்பை அணி 132 ஓவர்களில் 569 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தனுஷ் கோட்டியன் 129 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 120 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.துஷார் தேஷ்பாண்டே ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி விக்கெட்டுக்கு தனுஷ் கோட்டியனும், துஷார் தேஷ்பாண்டேவும் இணைந்து 240 பந்துகளில் 232 ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி மேற்கொண்டு ஒரு ரன் சேர்த்திருந்தால் ரஞ்சி கோப்பை வரலாற்றில் கடைசி விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்திருந்த டெல்லியை சேர்ந்த அஜய் சர்மா, மணீந்தர் சிங் ஜோடியின் சாதனையை சமன் செய்திருக்கும். இந்த ஜோடி 1991-92-ம் ஆண்டு மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி விக்கெட்டுக்கு 233ரன்களை வேட்டையாடி இருந்தது.
606 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பரோடா அணி 30 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தை டிராவில் முடித்துக் கொள்ள இரு அணிகளும் சம்மதம் தெரிவித்தன. முதல் இன்னிங்ஸில் 36 ரன்கள் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் மும்பை அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. முதல் இன்னிங்ஸில் 203 ரன்கள் விளாசிய முஷீர் கான் ஆட்ட நாயகனாக தேர்வானார். வரும் 2-ம் தேதி நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் மும்பை அணி, தமிழகத்தை எதிர்கொள்கிறது.