இஷாந்த் சர்மா உள்ளிட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அடிக்கடி காயமடைவதற்கு யாரும் எதிர்பார்க்க முடியாத, ஆனால் சரியான காரணத்தைக் கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சியாளர்.
"இப்போதெல்லாம் கிரிக்கெட் வீரர்கள் வைத்திருக்கும் பைகளுக்குக் கூட ஸ்பான்சர்கள் இருக்கின்றனர். வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் தங்கள் சொந்த ஸ்பான்சர் நிறுவனம் கொடுக்கும் ஷூக்களை அணிந்து பந்து வீசுகின்றனர். அதன் தரம் குப்பை. ஒரு குறிப்பிட்ட பிராண்டிற்கு இவர்கள் ஒப்பந்தம் செய்யப்படுவதால் அந்த ஷூக்களை அணிந்து பந்து வீசி நிறைய காயங்களுக்கு ஆளாகின்றனர்.
மேலும் கிரிக்கெட் ஆட்டத்திற்குத் தேவையான பயிற்சிகளே போதுமானது. ஜிம்மில் சென்று உடல் கட்டுக்கோப்பு பயிற்சிகளை இவர் மேற்கொள்வது எனக்கு ஏற்புடையதல்ல.
ஜிம்மிற்கு சென்று கூடுதல் சுமையை ஏற்றிக் கொள்கின்றனர், மைதானத்திற்கு வந்து காயமடைந்து வெளியேறுகின்றனர். இது ஆட்டத்தினால் ஏற்படும் காயங்கள் அல்ல, ஆட்டத்திற்கு முந்தைய செயல்பாடுகளினால் ஏற்படும் காயங்கள் என்பதே எனது கருத்து.
1970 மற்றும் 80ஆம் ஆண்டுகளில் ஆடிய கபில் தேவ், மைக்கேல் ஹோல்டிங், ஜெஃப் தாம்சன் உள்ளிட்டோரிடம் கேளுங்கள் தெரியும். அவர்கள் உடற்பயிற்சி நிலையத்திற்குச் சென்று உடலின் மேல்பகுதி வலுவை அதிகரித்துக் கொண்டது கிடையாது. நிறைய ஓடுவார்கள். நீச்சல் பயிற்சி செய்வார்கள் இது போன்ற பயிற்சிகளே கை கால்களை வலுப்படுத்த உதவும்” என்று கூறுகிறார் அவர்.
மேலும், “வருண் ஆரோனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பாதுகாக்கவேண்டும். 24 வயதில் அவருக்கு முதுகு அறுவை சிகிச்சை நடந்துள்ளது, இது விரும்பத் தக்கதல்ல.
வருண் ஆரோன் மணிக்கு 90 மைல்கள் வேகத்தைத் தொடுகிறார். புவனேஷ் குமார் 80 மைல்களைத் தொட்டாலே ஆச்சரியம். இவர்களுக்கான பயிற்சி முறைகள் முற்றிலும் வேறு வேறு.
இஷாந்த் பிரச்சினை என்ன?
"இஷாந்த் சர்மாவின் சிகிச்சைக்குப் பிறகான முன்னேற்றம் குறித்து திருப்தியாக உள்ளது. ஆனால் அவர் இங்கிலாந்தில் அதிகம் விளையாடியதில்லை என்பதால் தற்போது பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம். ஓடி வந்து முன்காலைத் தூக்கி தரையில் அடித்துப் பந்து வீசும்போது முழங்காலில் சுமை அதிகரிக்கும். அதுவும் இங்கிலாந்து பிட்ச்கள் மென்மையாக இருக்கும் என்பதால் மேலும் அழுத்தம் அதிகரிக்கும்.
இதனால்தான் இந்திய பவுலர்கள் இங்கிலாந்துக்குச் சென்று உள்நாட்டு கிரிக்கெட்டில் பல்வேறு பிட்ச்களில் பந்து வீச வேண்டும். ஜாகீர் கானை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரே சீசன் வொர்ஸ்டர் ஷயருக்காக ஆடினார். அதன் பிறகு முற்றிலும் வேறு விதமான பவுலரானார் ஜாகீர். கவுண்ட்டி கிரிக்கெட் ஆடினால்தான் உடற்தகுதி விஷயத்தில் நல்ல அறிவு கிட்டும்" இவ்வாறு கூறியுள்ளார் ஜான் குளோஸ்டர்